பிள்ளைகளுக்கு சொத்தை எழுதி வைக்க போறீங்களா? கொஞ்சம் கவனம்

Madras High Court Judgement-மகனோ, மகளோ பெற்றோரை முறையாக பராமரிக்காவிட்டால், அவர்கள் பெயரில் எழுதி வைத்த சொத்துகளை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா சமீபத்தில் அளித்துள்ளார்.
எத்தனையோ குடும்பங்களில் வசதியாக வாழ்ந்த பெற்றோர் பலர் பிள்ளைகளின் ஆதரவை இழந்து முதியோர் இல்லங்களில் வசித்து வருகின்றனர். ஒருசிலர் சாப்பாட்டுக்கே வழியின்றி யாசகம் பெற்று சாப்பிடும் நிலையும் உள்ளது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.
சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி. அவரது மனைவி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவருமே அரசுப் பணியில் இருந்தவர்கள் என்பதால், தங்கள் இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைத்தனர். நல்ல வேலை, சமூக அந்தஸ்துடன் பெரிய இடத்தில் திருமணம் என எந்த குறையும் இல்லாமல் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், தாங்கள் சேர்த்து வைத்த சொத்துகளை இரு மகன்கள் பெயரிலும் எழுதி வைக்க நினைத்தனர். அப்போது , இளைய மகன் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் முடிவை மாற்றிக் கொண்டு, ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வரும் மூத்த மகன் பெயருக்கே மொத்த சொத்துகளையும் எழுதி கொடுக்க முடிவெடுத்தனர்.
நன்கு படித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள் என்பதால், 'தங்கள் வாழ்நாள் முழுவதும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செலவு போன்றவற்றை குறைவற செய்துதர வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தனது மூத்த மகனுக்கு கடந்த 2012-ல் செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். அப்போது தாய் பெயரில் ரூ.3 லட்சத்தை மூத்த மகன் டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு, நிலைமை தலைகீழானது.
பெற்றோர்கள் இருவரும் இருமுறை உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைப்பதே கடினம் என்ற அளவிற்கு சென்றபோதுகூட ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் என்ன என்று கேட்கவில்லை. வேறு வழி தெரியாமல் தவித்த தாய், ஒரு கட்டத்தில் தனது கணவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தார். சேமித்து வைத்த பணம், நகைகளை விற்று தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இறுதி முயற்சியாக கடந்த 2014-ல் மூத்த மகனை தொடர்பு கொண்ட தாயிடம், ''என் வீட்டை எப்போது காலி செய்து கொடுப்பீர்கள்?'' என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார் மகன்.
நமக்கு இவ்வளவு துன்பம் கொடுத்து, துயரத்தில் ஆழ்த்திய மகனுக்கா நம் சொத்தை எழுதி வைக்க வேண்டும்? என்ற சிந்தனை அவர்கள் மனதில் ஏற்பட்டது. மகனுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை உடனடியாக ரத்து செய்தனர்.
பெற்றோர் உயிருக்கு போராடியபோது கண்டுகொள்ளாத மகன், பலகோடி மதிப்புள்ள, வாடகை தந்து கொண்டிருக்கும் சொத்து பறிபோனதால் பதறினார். உடனடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்து, 8-வது உதவி பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரித்த நீதிபதி, ''பெற்றோர் செய்தது சரியானதுதான்'' எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து 3-வது கூடுதல் பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மகன் மேல்முறையீடு செய்ய, அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டிதான் பதினாறு அடி பாய வேண்டுமா? இங்கு தாய் அறுபத்துநான்கு அடி பாய்ந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ''மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்'' எனும் திருக்குறளை உவமை காட்டி தனது தீர்ப்பை தொடங்கினார். பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், பெற்றோரை முதுமையில் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பெரும்பாலான பிள்ளைகள் ஏற்க மறுப்பது வேதனையின் உச்சம். இந்த வழக்கில் மூத்த மகனின் செயல்பாடு ஈவு இரக்கமற்றது என கடுமையாக விமர்சித்த நீதிபதி, கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துகளை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என பல்வேறு வழிகாட்டி தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பெற்றோர் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தது சரியானதே என்று தீர்ப்பளித்தார்.
தற்போதைய இளைய சமூகம் பெற்றோரை நோகடிக்க கூடாது என்ற விழுமியத்தின் முக்கியத்துவத்தையும், சமுதாய பொதுப் பண்புகளையும் வேகமாக இழந்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், வயதான பெற்றோருக்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவசமாக ஆஜராகி வாதிட்டு வெற்றி தேடிக் கொடுத்தது. பெற்றோர்களுக்காக வாதாடிய முன்னாள் அரசு வழக்கறிஞர் சாரதா விவேக் கூறுகையில், 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் - 2007 பிரிவு 23-ன்படி, அவர்களுக்கான பராமரிப்பு மற்றும் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் படியேறி நியாயம் கேட்ட பெற்றோருக்கு சரியான தீர்ப்பை நீதிபதி பி.டி.ஆஷா கொடுத்துள்ளார். பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு மகனுக்கோ, மகளுக்கோ செட்டில்மென்ட் கொடுக்கும்போது அந்த நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யாவிட்டால், சட்ட ரீதியாக அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு. இனி தங்களது சொத்துகளை அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடாக வாரிசுகளுக்கு எழுதி வைக்கும்போது தங்களை கடைசி வரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதி கொடுத்தால் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இருக்கும். பிள்ளைகளால் எந்த பிரச்சினையும் வராது என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu