அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கம் தான்: ஓ.பி.எஸ் சொல்றார்..!

அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கம் தான்: ஓ.பி.எஸ் சொல்றார்..!
X

பேட்டியளிக்க வரும் ஓபிஎஸ் அணியினர்.

பாஜக உடன் 2024ல் மட்டுமல்ல, 2026 தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

பாஜவுடனான உறவை முறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு ஒ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட ஓபிஎஸ் அணியினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, பாஜக உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக சொல்றீங்க.. அவங்க என்ன சொல்றாங்க.. உங்களை எதற்காக அணுகுகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்று செய்தியாளர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம். பேச்சுவார்த்தை நடத்தியதை அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.

அப்போது செய்தியாளர், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு உங்களை கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ஏங்க நான் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன். ஆனால் அதற்கு பிறகும் கூப்பிட்டாங்களா இல்லையா என்று ஏன் சண்டையை மூட்டி விடுறீங்க என்று கேட்டார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் கூட்டணி இல்லாமல் உங்களால் தனித்து செயல்பட முடியுமா என்று கேட்டார். அப்போது பேசிய ஓபிஎஸ் எங்களால் கூட்டணி இல்லாமல் உறுதியாக செயல்படவும் முடியும் என்றார். அப்போது செய்தியாளர், நீங்கள் 2019ல் என்டிஏ கூட்டணியில் இருந்தீர்கள். 2021 சட்டமன்ற தேர்தலிலும் என்ஏடி கூட்டணியில் இருந்தீர்கள். இப்போது என்டிஏ கூட்டணியில் இருக்கீங்களா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த ஓபிஎஸ், ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன் என்றார். அப்போது குறுக்கிட்ட வைத்திலிங்கம், ஏற்கனவே தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் நிலைமை இன்று ஒன்று இருக்கும். நாளை ஒன்று நடக்கும். தேர்தல் வரட்டும் பார்க்கலாம். ஓபிஎஸ் ஏற்கனவே இதுபற்றி சொல்லியிருக்கிறார் என்றார்.

அப்போது செல்போனை எடுத்த ஓபிஎஸ் இன்றைய தேதி வரையில் இருக்கிறது. நாளைக்கு உங்களிடம் பேசும் போது, தேதி வரையிலும் காண்பிப்போம். காஞ்சிபுரத்தில் புரட்சி பயணத்தை தொடங்குவதாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் தள்ளிப்போனது. அதுபற்றி கூட்டத்தில் பேசி இருக்கிறோம்.

எந்த மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதிமுக எத்தனையாக பிரிந்து இருந்தாலும், அவர்களின் வாக்குகள் சிதறாது. எங்களுக்குத்தான் விழும் என்றார். உங்களோடு பாஜகவில் இருந்து பேசிக்கொண்டிருப்பது யார்? ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், நாங்கள் முதலில் இருந்தே அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நாங்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை பழனிசாமியிடம் போய் கேளுங்க. அவரு முடியாது முடியாது என்று சொல்லியதால் இதோடு 10 தோல்வியாகி விட்டது என்றார்.

அப்போது குறுக்கிட்ட வைத்திலிங்கம் எங்களுடைய கணிப்புபடி எடப்பாடியை தவிர்த்து அண்ணா திமுக ஒன்றிணையும். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஒன்றிணையும். கூடிய சீக்கிரத்தில் நடக்கும். இது எங்களுடைய கணிப்பு என்றார். இதனிடையே சசிகலாவை சந்திப்பது எப்போது என்ற கேள்விக்கு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்போதுதான் அவர் மீண்டு வந்துள்ளார். பொறுமையாக இருங்கள் விரைவில் நடக்கும் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!