செவிலியர்கள் பிரச்னையை கையில் எடுக்கும் எதிர்கட்சிகள்.. என்ன செய்யப் போகிறது திமுக அரசு?
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள். (கோப்பு படம்).
தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்த 3 பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
ஓமந்தூரார் மருத்துவமனையை கொரோனா மருத்துவமனையாக மாற்றியவுடன் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பயந்து ஓடி விட்டனர். மருத்துவமனை முதல்வர் மட்டுமே பணியில் இருந்தார். ஆனால், ஒப்பந்த செவிலியர்கள் கொரோனா முதல் அலையின் போதே துணிந்து பணிக்கு வந்து பல உயிர்களை காப்பாற்றினர்.
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது சாதாரண ஒன்று. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. கொரோனா முழு உடல் கவச உடையுடன் இரவுப் பணி பார்த்தவர்களை பல ஊர்களில் நின்று போராடும் நிலைக்கு அரசு தள்ளி விட்டது. ஒப்பந்த செவிலியர்களை விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது. எம்ஆர்பி தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சமூக இட ஒதுக்கீட்டை பின்பற்றித்தான் அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர்.
8500 நபர்களுக்கு பணி அழைப்பு வழங்கப்பட்டபோது 300 நபர்கள் தான் பணிக்கு வந்தனர். பணியில் சேர 15 நாள் இடைவெளி கொடுத்தல் அவர்களும் மனம் மாறி விடுவார்கள் என்பதால், மூன்றே நாளில் பணிக்கு வரவேண்டும் என அழைப்பு கொடுத்தோம். இதுதான் உண்மை. ஆனால் உங்களை இப்படி முச்சந்தியில் நிறுத்தி விட்டது இந்த ஆட்சி, இது ஆட்சிக்கு ஆபத்தாக அமையும்.
செவிலியர்கள் உடுத்தியுள்ள கவச ஆடைகளை தற்போது உள்ள சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் உடுத்தி 8 அல்லது 12 மணி நேரம் கழிப்பிடம் செல்லாமல் பணியாற்றினால் ஆட்சி செய்து வரும் அரசு என்ன கூறினாலும் அதனை நான் தட்டாமல் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பணி செய்ததால் பல செவிலியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
கலகத் தலைவன் திரைப்படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்கும் முதல்வர் என்றாவது ஒப்பந்த செவிலியர்கள் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டிருப்பாரா..? இரண்டரை ஆண்டுகளாக வேலை வாங்கி விட்டு இப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டது சரியா?. ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒப்பந்த செவிலியர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய கனிமொழி இப்போது எங்கே சென்றார்.
கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை இரண்டு ஆண்டு ஏழு மாதங்கள் அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிரைக் காப்பாற்றும் செவிலியர்களை பணியமர்த்திவிட்டு இப்போது முறைகேடான பணிநியமனம் செய்திருக்கிறோம் என்பது அபத்தம் எனக் கூறிய அவர் முறைகேடு உள்ளதாக கூறுவதை என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினர். அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிப்படி அவர்கள் நடந்து கொண்டால் போதும்.
ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரில், பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்த கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும். பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் குரல் எழுப்புவார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருச்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கண்மணி, கடலூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற கர்ப்பிணி பெண்ணும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் முத்து பத்ரகாளி என்பவரும் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
இதேபோல், செவிலியர்கள் போராட்டம் பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. இதனால் தி.மு.க., அரசுக்கு தலைவலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தை திமுக அரசு எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu