துபாய் பயணம் முடிந்ததும் அதிரடி ஆக்சன்: உள்ளாட்சி உள்குத்துக்கு செக்..!
தேனி வடக்கு மாவட்டம் போல் தி.மு.க., தலைமைக்கு வேறு எந்த மாவட்டமும் தலைவலியை கொடுக்கவில்லை. எனவே தான் தி.மு.க., மேலிடம் தேனி வடக்கு மாவட்டத்தில் என்ன தான் நடக்கிறது என விசாரித்து அறிக்கை தாருங்கள் என டாக்டர் கம்பன் தலைமையிலான குழுவினை அனுப்பி உள்ளது.
வடக்கு மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி நகராட்சிகள் உள்ளன. பழனிசெட்டிபட்டி, மேலச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட பல பேரூராட்சிகள் உள்ளன. தேனியில் நகராட்சி தலைவர் பதவியை காங்., கட்சிக்கு தி.மு.க., ஒதுக்கிய நிலையில், தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் தனது மனைவியை களமிறக்கி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். இதன் பின்னணியில் நடந்த கதைகளை கேட்ட மேலிடத்திற்கே தலைசுற்றி விட்டது. அவ்வளவு பணம் கைமாறி உள்ளது. பல பிரசாத்கிஷோர்கள் விளையாடி உள்ளனர்.
இதேபோல் போடி நகராட்சி துணைத்தலைவர் பதவி, பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.,வே கூட்டணி கட்சிகளிடம் இருந்து பறித்துக் கொண்டது. இதில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மட்டுமே பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. வேறு எங்குமே பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை அ.ம.மு.க., கைப்பற்றினாலும், அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளில் சேர்மன் பதவி தருவதாக கூறி ஒருவரிடம் பல கோடி பணம் செலவு செய்ய வைத்து விட்டார்கள் என்ற புகாரும் மேலிடத்திற்கு சென்று விட்டது. பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பின்னரும் கூட்டணி கட்சியினரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டனர். அவர்கள் பணம் கொடுத்த பின்னரும் பிரச்னை முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கே கூட்டணி கட்சியினர் புகார் மனுவை அனுப்பி வைத்து விட்டனர். அவரும் மனுவை படித்து விட்டு டென்சன் ஆகி விட்டதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
இதன் எதிரொலியாக தேனி, போடி, பெரியகுளம் தி.மு.க., நகர செயலாளர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் பிரச்னை இழுபறியாகவே உள்ளது. இது பற்றி அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, துரைமுருகன் போன்ற மேல்மட்ட தலைவர்கள் முழு அளவில் விசாரணை நடத்தி தலைமையிடம் அறிக்கை கொடுத்து விட்டனர். குறிப்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி முதல்வர் ஸ்டாலினிடமே உண்மைகளை எல்லாம் சொல்லி விட்டார்.
அப்படி இருந்தும், தி.மு.க.,வின் ஐபேக் டீம், உளவுத்துறை போலீசார், டாக்டர் கம்பன் தலைமையிலான தி.மு.க.,வின் மேல்மட்ட விசாரணைக்குழுவினர் மூன்று பேருமே தனித்தனியாக விசாரணை நடத்தி தங்களது அறிக்கைகளை மேலிடத்திடம் கொடுத்து விட்டனர். (மூன்று பேரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருப்பது தான் ஹைலைட். காரணம் இவர்கள் யாருமே உண்மையை துளியும் மறைக்கவில்லை.) முதல்வர் ஸ்டாலின் வரும் 28ம் தேதி துபாயில் இருந்து திரும்பினாலும், இப்பிரச்னைகளை பேசித்தீர்க்க 30ம் தேதி வரை இறுதிக்கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னைகளை பற்றி மார்ச் 30ம் தேதி அல்லது ஏப்ரல் முதல் தேதி கவனம் செலுத்துவார், தனது முடிவுகளை உறுதியாக அறிவிப்பார். அதுவரை சற்று பொறுமை காத்தே தீர வேண்டும் என தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu