ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்
ஆவின் கொள்முதல் விலை உயர்வு
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35/- ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும்.
இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் 18.12.2023 முதல் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் நான்கு இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.
பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப் பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று ஆவின் நிறுவனம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu