/* */

அறிவாலயத்தில் நடக்கும் பரபரப்பு: யாருக்கு செக், யாருக்கு ஜாக்பாட்

நீண்ட நாட்களாக தமிழக அமைச்சரவை மாற்றப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

HIGHLIGHTS

அறிவாலயத்தில் நடக்கும் பரபரப்பு: யாருக்கு செக், யாருக்கு ஜாக்பாட்
X

தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்தே, "அமைச்சரவை மாறப் போகிறது; அமைச்சர்களின் இலாகாக்களைப் பந்தாடப் போகிறது தலைமை" என தி.மு.க வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தேர்தல் ரிசல்ட் தேதி நெருங்கி வரும் சூழலில், அந்தப் பேச்சு ரொம்பவும் தீவிரமாகியிருக்கிறது. "அமைச்சரவை மாற்றம் மனநிலையில் தான் இருக்கிறதா ஆட்சி மேலிடம்..?, யாருக்கு 'செக்', யாருக்கு 'ஜாக்பாட்'...", தி.மு.க.,வை சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், "நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போதே, சில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. நாமக்கல்லில், தலைமை கண்டித்தும்கூட அமைச்சர் மதிவேந்தனும் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்திலும் உருப்படியாக தேர்தல் வேலையைப் பார்க்கவில்லை. ஈரோட்டில், அமைச்சர் முத்துசாமி சுணங்கி விட்டதாக தலைமைக்குப் பலமுறை புகார் சென்றும், தலைமையிலிருந்து முத்துசாமியை எச்சரித்தும் கூட, அவர் மாறவில்லை.

தன் மகன் திலீப்புக்குச் சீட் கேட்டுக் கிடைக்காத விரக்தியில், இராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பணியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை அமைச்சர் ராஜகண்ணப்பன். இதுபோல, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது தேர்தல் சமயத்தில் புகார்கள் வரிசைக்கட்டின. அப்புகார்களை விசாரிக்க கட்சிக்குள் ஒரு குழுவை அமைத்திருக்கிறது கட்சி மேலிடம். உளவுத்துறையும் தனியாக ஒரு ரிப்போர்ட்டை தலைமைக்கு அளித்திருக்கிறது. அதன்படிதான், அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமைச்சர்கள் மதிவேந்தனை எடுத்து விட்டு, அவருக்குப் பதிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஒருவரை அமைச்சராக்க ஆலோசிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரியில், பர்கூர் மதியழகனும் ஓசூர் பிரகாஷும் தான் தி.மு.க எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே அமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதுகிறார்கள். அமைச்சர் மதிவேந்தன் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், தனக்கு வாய்ப்புக் கிடைக்குமென காய் நகர்த்துகிறார் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா. அதேவேளையில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள, மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் ரூட்டில் மேலிடத்தின் தயவை நாடியிருக்கிறார் மதிவேந்தன்.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துசாமி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. முத்துசாமியிடம் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் வீட்டு வசதித்துறை இலாகாக்கள் உள்ளன. அதில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்குக் கூடுதல் பொறுப்பாக அளித்துவிட்டு, முத்துசாமிக்கு வீட்டு வசதித்துறையை மட்டும் ஒதுக்க கட்சிக்குள் ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கிடையே, 'அமைச்சர் பொன்முடி வசமிருக்கும் உயர்கல்வித்துறையை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு அளித்தால், ஆளுநர் ஆர்.என்.ரவியை திறம்பட கையாள்வார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் மின்சாரத் துறையை பொன்முடிக்கு அளிக்கலாம்' என கட்சி சீனியர்கள் மேலிடத்திற்கு ஆலோசனை அளித்திருக்கிறார்கள்.

செஞ்சி மஸ்தானை அமைச்சர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட, ஒரு டீம் அறிவாலய மேலிடத்திடம் கடுமையாகவே முட்டி மோதுகிறார்கள். மஸ்தானின் உறவினர்கள் பெயரில் வரும் புகார்களையெல்லாம் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். ஒருவேளை அவர் கழற்றிவிடப்பட்டால், அமைச்சர் பதவியைப் பெற பாளையங்கோட்டை அப்துல் வஹாப்பும் ஆவடி நாசரும் தீவிரமாகவே காய் நகர்த்துகிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி. அவருக்குப் பதிலாக புதிதாக யாரும் அமைச்சரவைக்குள் இடம்பெறவில்லை. அவர் இடமும் காலியாக இருப்பதால், 'இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பைப் பெற்றுத் தர வேண்டும்' என்கிற குரல் கட்சிக்குள் ஒலிக்கிறது.

இந்த ஆலோசனைகளெல்லாம் கட்சியின் சீனியர்கள் மட்டத்திலேயே தீவிரமாக நடைபெறுகிறது. கட்சி மேலிடத்திடம் அவ்வப்போது ஆலோசனைகளைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். ஆனால், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 'ஜூன் 4-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வெளியானபிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்கிற மனநிலையில் இருக்கிறது மேலிடம். புதிதாக அமைச்சர் பொறுப்பைப் பெற ஒரு தரப்பும், இருக்கும் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமைச்சர்கள் தரப்பும் கடுமையாகக் காய் நகர்த்துவதால், அதிரிபுதிரி ஆகியிருக்கிறது அறிவாலயம்" என்றனர்.

இது தவிர வடமாவட்ட அமைச்சர் ஒருவரின் பதவியும் 'ஹிட் லிஸ்ட்'-ல்தான் இருக்கிறதாம். வயோதிகம் காரணமாக அவர் பதவி பறிபோகலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். அவரிடத்தைப் பெற, இப்போதிருந்தே வடமாவட்ட எம்.பி ஒருவரின் சிபாரிசில் தலைமையை நெருங்கத் தொடங்கியிருக்கிறார்கள் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர். ரிசல்ட் தேதி நெருங்க நெருங்க, அறிவாலயத்தில் பல்ஸ் எகிறிக்கொண்டே போகிறது. மாற்றம் இருக்குமா... பொறுத்திருந்து பார்ப்போம்.!

Updated On: 23 May 2024 3:07 AM GMT

Related News