நீலகிரி மலைப்பகுதியில் சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது
பிடிபட்ட சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தை உட்பட 2 பேரை கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி புதரில் மறைந்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் மூன்று வயது சிறுமி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிறுத்தை தாக்குதலில் நான்கு பேர் இதுவரை காயமடைந்ததுள்ளனர். சிறுத்தையின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி சிறுமி உயிரிழந்தார். 2 பேரை கொன்ற சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டுப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று மாலை முதல் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி, கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
சிறுத்தையை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், பந்தலூர் பகுதியில் குழந்தை உட்பட 2 பேரை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மேலும், டிரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் மேங்கே ரேஞ்ச் பகுதியில் ஆம்ப்ரஸ் என்ற இடத்தில் சிறுத்தை பிடிபட்டது. மயக்க நிலையில் புதரில் பதுங்கி இருந்த சிறுத்தையை வனத்துறையினர் வலை மூலம் பிடித்து கூண்டில் அடைத்தனர். அந்த சிறுத்தை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. இந்த சிறுத்தை தாக்கியதில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மயக்க ஊசி செலுத்தவில்லை என்றால் சிறுத்தையை பிடித்திருக்க முடியாது. சிறுத்தையின் அட்டகாசம் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே சென்றதால் அதனை துப்பாக்கியால் சுட்டாவது பிடிக்க வேண்டும் என வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் கள நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து சிறுத்தையை உயிருடன் பிடித்து இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu