நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் 75 டெண்டர்கள் வாபஸ்
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், உணவு பொருட்களை, மாவட்ட கிட்டங்கிகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்கள் கோரியது. அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 75 டெண்டர்கள் கோரப்பட்டன. இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில், மாநில அளவிலான குழு இந்த டெண்டர்களை கோரியுள்ளது என்றும், இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளுக்கு விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடிக்கு மேலான பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், அதை மீறி 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளதாகவும், இது சட்டவிரோதமானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் அனுபவமில்லாத நிறுவனங்ளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த டெண்டர்களை ரத்து செய்து, புதிதாக டெண்டர்கள் கோர உத்தரவிட வேண்டும் என மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில், டெண்டரில் பங்கேற்க போதுமான அளவில் எவரும் முன் வராததாலும், மனுவில் எழுப்பியுள்ள பிரச்னைகளை கருத்தில் கொண்டும், 75 டெண்டர் அறிவிப்புக்களையும் திரும்பப் பெற்றுள்ளதாகவும், விரைவில் புதிய டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 75 வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu