தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது

தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது
X

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் (பைல் படம்).

தமிழகத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாக 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவக்குழுவினர் நடத்திய சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் மருத்துவக்குழு நடத்திய சோதனையில் மருத்துவம் படிக்காமல் மருந்தகம் வைத்துக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்த மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பயன்படுத்திவந்த மருந்து பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

எடப்பாடி அருகே அவனியூர் புறவழிச்சாலை அருகே தனியார் மருந்தகத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த கவிபிரியா என்ற 21 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தெலுங்கர் தெருவில் மருத்துவ பட்டம் பெறாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த வி.என் பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதே போல வைகுண்டம் காலிபட்டி பிரிவு சாலையில் சிகிச்சை அளித்து வந்த தேவராஜ் என்பவரும் கைதானார். இருவரும் 60 வயது கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டியில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். 12ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு வீட்டிலும் அத்துடன் நெய்தலூர் காலனி பகுதியில் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு கிளினிக் நடத்தியும் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவசிகிச்சை அளித்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு கிளினிக்குகள் சீலிடப்பட்டன. பௌகொண்டபுர கிராமத்தில் கிளினிக் வைத்து ஓராண்டாக மருத்துவம் பார்த்து வந்த ஷானிமா கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் 15 ஆண்டுகளாக மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திவந்த சௌகத் அலி என்பவரும் கைதானார். இதே போல கொத்தகொண்ட பள்ளி என்ற கிராமத்தில் சீனிவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!