உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட ரூ.3 கோடி ஓதுக்கீடு
முதல்வர் ஸ்டாலின்
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 1968- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இருமொழிக் கொள்கை' தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றியச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவரும் இந்தத் தருணத்தில் தமிழைச் சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாகச் சென்னை உ உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றைப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களது பயன்பாட்டிற்காகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று கலைஞர் அவர்களின் வழிநடக்கும் நமது அரசு முடிவு செய்துள்ளது.
இப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். “தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே" என்று பாவேந்தர் காட்டிய வழியில் உரிய இடத்தைப் பெற்றுத் செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் தருவோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu