பல லட்சம் உயிர்களை காப்பாற்றியவர்களை பணி நீக்கம் செய்தது சரியா?
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியதற்காலிக மருத்துவ பணியாளர்கள் 2472 பேர் பணி நீக்கம்
2019ம் ஆண்டில் இறுதியில் தொடங்கிய கொரோனா பேரிடர் இந்த உலகினை படுத்திய பாட்டை இந்த நுாற்றாண்டே மறந்து விட முடியாது. பல கோடி உயிர்களை பறி கொடுத்துவிட்டு இன்னமும் உலகம் பரிதவித்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளி்த்து விட்டு தனிமைக்காலம் முடிந்து மீண்டும் திரும்பியவர்களை மலர் துாவி வரவேற்றது சமூகம். இதனையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
சம்பாதிப்பதற்காக பலசரக்கு கடைகளை திறந்து வைத்தவர்களையும், சிறு, சிறு காய்கறி வியாபாரிகளையும் கூட, உயிரை பயணம் வைத்து சமூகத்தை பாதுகாக்கின்றனர் என நாட்டின் பிரதமரே புகழ்ந்தார். அந்த அளவு கொரோனா காலத்தில் யாருமே வீட்டை விட்டு வெளியே வராமல் உயிருக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கி கிடந்த போது, வணிக ரீதியில் வருவாய் பார்க்க வெளியே வந்தவர்களுக்கே பெரும் வரவேற்பும், அளவிட முடியாத மரியாதையையும் கொடுத்தது இந்த சமூகம்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த நேரத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல டாக்டர்கள், செவிலியர்கள் உயிரிழந்த நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையினை தவிர்க்க அப்போதைய அ.தி.மு.க., அரசு 14 ஆயிரம் மருத்துவ பணியாளர்களை நியமித்தது. இவர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தான் நியமித்தது.
பணிக்கு சேர்ந்தால் சம்பளம் வரும் என்றாலும், உயிருக்கு உத்தரவாதமே இல்லை என்ற நிலை தான் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட போது இருந்தது. அப்படி இருந்தும், ஒரு வேளை உயிரிழந்தால், அரசு வழங்கும் நிவாரம் தன் குடும்பத்திற்கு கிடைக்கும், உயிர் பிழைத்தால் தங்களுக்கு இதன் மூலம் வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணிக்கு சேர்ந்தார்கள். இவர்களின் மருத்துவ சேவை மூலம் உண்மையில் கொரோனா காலத்தில் பல லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இது அரசுக்கும், இந்த சமூகத்திற்கும் தெரியும். இப்படி அவசர காலத்தில் உதவியவர்களை ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்க ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பணி நியமனம் செய்யப்பட்ட 'போர் தவுசண்ட்' என செல்லமாக அழைக்கப்பட்ட 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தவர்களை கூட, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது உதவினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை ஏதேதோ காரணம் சொல்லி பணி நிரந்தரம் செய்தது தமிழக அரசு.
அப்படி விசுவாசமான அரசு தான், இப்போது, தன் உயிரை பணயம் வைத்து பல லட்சம் உயிர்களை பாதுகாத்த மருத்துவ பணியாளர்களை ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அதுவும் பிஎப்.7 என்ற ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் மீண்டும் மிரட்டி வரும் நிலையில் அரசு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது.
அரசின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 2472 தற்காலிக பணியாளர்களையும், மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் பகிர தொடங்கி உள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களும் இந்த உத்தரவை ஏற்றது போல் இதுவரை தகவல்கள் இல்லை. மொத்தத்தில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஒட்டுமொத்த சமூகத்தின் அதிருப்தியை தான் சம்பாதித்துள்ளது. இதனை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் இவர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu