ஆவின் பணி நியமன முறைகேடு: 236 ஊழியர்கள் அதிரடி நீக்கம்

ஆவின் பணி நியமன முறைகேடு: 236 ஊழியர்கள் அதிரடி நீக்கம்
X
ஆவினில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை ஓராண்டு உள் விசாரணைக்குப் பிறகு ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆவினில் ஆகஸ்ட் 2022 மற்றும் மார்ச் 2021 காலகட்டத்தில் மேலாளர், உதவி பொது மேலாளர், துணை மேலாளர், உள்ளிட்ட பணிநியமனங்களில் முறைகேடு நடந்தாக புகார் எழுந்தது. எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியது. நேரடியாக பணி வழங்கியது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தாக அடுத்தடுத்து புகார் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் 236 ஊழியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பணிநியமனம் பெறுவதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

மேலும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரையில் ஆவின் பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நியமனங்கள் நேரடியாக வழங்கப்பட்டன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரே ஊரைச் சேர்ந்தவர்களை வரவைத்து உடனே அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 17 பேருக்கு அப்படி பணி நியமனம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்திருந்தது.

இதுகுறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால் வள துணைப் பதிவாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின்படி மேலாளர், முதுநிலை பணியாளர் உள்பட 47 பேர் முறைகேடாக பணியில் சேர்ந்தது அம்பலமாகி உள்ளது.

கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்ட பால் சங்க செயல் அலுவலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். இதில் மதுரை மாவட்டத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிநியமன முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!