வ.உ.சிதம்பரனார் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழக முதல்வரின் 14 அறிவிப்புகள்
வ.உ.சிதம்பரனார் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது :
வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது பிறந்த நாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக அவரைப் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். என்னுடைய முதல் சுதந்திர தின உரை - நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று நான் அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அவரது 150ஆவது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.
சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.
தூத்துக்குடி மாநகரில் முதன்மைச் சாலையான மேலபெரிய காட்டன் சாலை, இனி 'வ.உ.சிதம்பரனார் சாலை' என அழைக்கப்படும்.
தனது வாழ்நாளின் முக்கிய நாட்களைக் கோவைச் சிறையிலே கழித்த வஉசிதம்பரனார் அவர்களுடைய முழு உருவச் சிலையானது. கோயம்புத்தூர் பூங்காவில் அமைக்கப்படும்.
செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில் ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும்.
வ உசிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.
வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம் போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றிவரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வசி விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மறைந்த நவம்பர் 18 ஆம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5 2022 வரை தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் உருவாகும் அரசுக் கட்டடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பெயர் சூட்டப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி பள்ளிகளுக்கும். கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும்.
தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாகக் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை வெளியிடப்படும். முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu