60 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமம்: கண்கலங்க வைக்கும் விவசாய வரலாறு
வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமங்கள்.
ஐப்பசி பிறந்து விட்டாலே புத்தாடை, பலகாரம், பட்டாசு என நாடு முழுவதும் தீபாவளி பேச்சு களை கட்டத் தொடங்கி விடும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்டிகை தீபாவளி. மகிழ்ச்சி பொங்கும் இப்பண்டிகையை, தொடர்ந்து 60ஆண்டாக, 13 கிராம மக்கள் கொண்டாடாமல் இருந்து வருவது வியப்பாக உள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காலம் ஆகும் இந்த பருவ காலத்தில்தான் வேளாண்மை பணிகள் மும்முரமாக நடைபெறுவது வழக்கம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, சத்திரப்பட்டி,கிலுகிலுப்பட்டி, இடையபட்டி,எருமைப்பட்டி, தென்மாபட்டி உட்பட13 கிராமங்கள் உள்ளன. இவர்கள் 1954 முதல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. தீபாவளியன்று இக்கிராமங்களில் பலகார மணம் வீசாது, பட்டாசு சத்தம் கேட்காது, புத்தாடை உடுத்திய எவரையும் காண முடியாது. தீபாவளிக்கென எந்த அறி குறியும் இல்லாமல், வழக்கம் போல் தெருக்களில் விளையாடும் சிறுவர்கள், வயலுக்கு செல்லும் விவசாயிகள், மரத்தடியில் கதைக்கும் முதியோர்கள், ஆகிய காட்சிகளைத்தான் காண முடியும்.அந்த காலத்தில், வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்த இவர்கள், அறுவடைக்குப் பின் கடனை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அந்த கால கட்டத்தில் வந்த தீபாவளியையும் கடன் வாங்கி கொண்டாடியதால் அறுவடையைக் கொண்டு, இரண்டு கடனையும் செலுத்த முடியாமல் திணறியுள்ளனர். வேளாண் பணிகள் பாதிக்கபடாமல் இருக்கவும் கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமை பேணவேண்டும் என்ற நோக்கோடும் இதற்கு முடிவு கட்ட கிராமத்தின் பெரிய அம்பலகாரர் சேவகன் தலைமையில் கிராமமக்கள் கூடி, விவசாயப் பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை என்றும், பதிலாக அறுவடைக்கு பின் வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தனர்.
அது முதல் இக்கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. இதனால் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடினாலும் இங்கு மட்டும் அதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்து வருகிறது. கிராம மக்கள் கூறும் போது 60 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராம மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்தனர். வறுமையில் வாடிய அவர்கள், மீண்டும் மீண்டும் கடன் வாங்கி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை விதித்தனர். இப்போது வறுமையிலிருந்து மீண்டு பலர் நல்ல வசதியாக இருந்தாலும், கட்டுப்பாட்டை இன்றளவும் மதித்து வருகின்றனர். இதனால் இது வரை தீபாவளியை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு ஏற்பட்டதில்லை," என்கின்றனர் "வெளியூரில் இருந்து இந்த கிராமங்களுக்கு திருமணம் முடித்து வரும் பெண்கள், இங்கு வந்ததும் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். இங்கிருந்து வெளியூருக்கு திருமணம் முடித்து செல்லும் பெண்கள் அங்குள்ள நடை முறைப்படி கொண்டாடலாம். ஒட்டு மொத்த கிராமத்திற்கும் இது தான் கட்டுப்பாடு என்பதால் எங்களுக்கு எந்தவித சங்கடமும் ஏற்படாது.
"இந்த கிராம மக்கள் வேலைக்காக எந்த ஊரில் வசித்தாலும், அங்கும் இப்பண்டிகையை கொண்டாடமாட்டார்கள். இங்குள்ளவர்கள் தீபாவளியன்று வயல் வேலைகளுக்கு சென்று விடுவோம்," என்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu