10 % இடஒதுக்கீடு விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் சார்பில் கடிதம் அளிப்பு

10  % இடஒதுக்கீடு விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் சார்பில் கடிதம் அளிப்பு
X

பைல் படம்

சிபிஐ (எம்) சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி எம்எல்ஏ., துணைத்தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் அளித்துள்ளனர்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் முதலமைச்சரிடம் ஆலோசனை கடிதம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ (எம்) சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி எம்எல்ஏ., துணைத்தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் அளித்துள்ள கடித விவரம்:

இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்படும் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துகளை பதிவு செய்கிறோம்.

நால்வர்ண முறைப்படி அமைந்துள்ள ஏற்றத்தாழ்வான சாதிய சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்ட பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமூக நீதி கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமூக நீதி என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு கோட்பாடு நூறாண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சாதிய ஏற்றத் தாழ்வுகள் நீடிக்கும் வரை சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாடு நீடிக்க வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வருகிறது. சமூக அடிப்படையில் வழங்கப்படும் கோட்பாட்டை ரத்து செய்து விட்டு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலரால் நாட்டின் பல பகுதியில் எழுப்பப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் இதனை எதிர்த்து குரல்கொடுத்ததோடு சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி வருகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீடு பல அளவீடுகளில் அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால், பல மாநிலங்களில் 50 முதல் 70 சதவிகித மக்களே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள குறிப்பிட்ட சதமான மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையே தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பான போராட்டங்கள் வெடித்த சூழ்நிலையில் உழைப்பாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையில் இதுவரையில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரில் ஏழைகளுக்கு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1990ம் ஆண்டு முதல் கோரி வந்துள்ளது. அதேசமயம், முன்னேறிய பிரிவினருக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் 103வது சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு 2019ம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த சலுகைகளை பெறுவதற்கு பாஜக ஒன்றிய அரசு பணக்காரர்களுக்கு சேவகம் செய்யும் நோக்கோடு வருமான வரம்பினை தீர்மானித்து ஏழைகளை வஞ்சித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் 103வது சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கதாகியுள்ளது.

மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கு ஒன்றிய பாஜக அரசு தீர்மானித்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம், அதிகபட்சம் 5 ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரஅடி அளவில் குடியிருப்பு மனை மற்றும் 900 சதுர அடி அளவிற்கு குடியிருப்பு வீடு என்ற வரம்பினை மாற்றியமைக்க தவறியுள்ளது. மேற்கண்ட வருமான வரம்பின் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இடஒதுக்கீடு என்ற நோக்கத்தையே ஒன்றிய பாஜக அரசு பாழடித்துள்ளது. இதன் மூலம் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்போர்களுக்கு எதிரான பாகுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது. பணம் படைத்தவர்களுக்கான இடஒதுக்கீடாக இது மாற்றப்பட்டுள்ளதானது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 103வது சட்டத்திருத்தத்தின்படி இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத நலிந்த பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a Maximum of 10 percent) இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கட்டாயமாக வழங்க வேண்டுமென குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்டரீதியான நிர்ப்பந்தம் ஏதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் இடம்பெறவில்லை என விபரங்கள் தெரிவிக்கின்றன. இப்பிரிவு 5 சதமான மக்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்வதற்கும், அவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளிக்க வேண்டிய இடஒதுக்கீட்டு அளவினை தீர்மானிக்கவும், இச்சலுகை பெறுவதற்கான வருமான வரம்பை சிபாரிசு செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமெனவும், அந்த ஆணையத்தின் சிபாரிசுகள் அடிப்படையில் செயல்பட வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags

Next Story