கால்பந்தாட்ட வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை: முதல்வர் ஆறுதல்
சென்னையில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
சென்னையில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று, வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் - உஷா ராணி ஆகியோரது மகளான செல்வி பிரியா, சென்னை இராணிமேரிக் கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.
மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் அவரது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து, நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அம்மாணவியின் பெற்றோரிடம் உங்களுக்கு ஆதரவாக என்றும் நாங்கள் இருப்போம் என்றும், உங்களின் தேவைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்று ஆறுதல் கூறினார்.
மேலும், அம்மாணவியின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) பணிக்கான ஆணையினையும், அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கௌதமபுரம் திட்டப்பகுதியில் குடியிருப்பிற்கான ஆணையினையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறியபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்வையிட்டார்.
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிக்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu