கொரோனா - குடும்பம் என்னாகுமோ-பயத்தில் உள்ள காவலர்களில் ஒருவர் சொன்னது.

கொரோனா - குடும்பம் என்னாகுமோ-பயத்தில் உள்ள காவலர்களில் ஒருவர் சொன்னது.
X

காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணி

காவல்துறையினர் மனஉளைச்சல் பற்றி கொரோனா பாதித்த காவலரின் குமுறல்.

காவலர்கள் கொரோனாவால் மரணமடைகின்றனர் என்ற செய்தியை பார்க்காமலா இருப்பார்கள் அதிகாரிகள்? பார்த்தும் ஏன் எந்த தடுப்பு நடவடிக்கையுமே எடுக்கல என கொரோனா பாதித்த காவலரின் குமுறல்..

செய்திதாள்களில் காவலர் ஒருவர் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினார் என செய்தி வந்தாலே பணிநீக்கம் செய்யக்கூடிய காவல்துறை அதிகாரிகள்.தினம் தினம் இத்தனை காவலர்கள் கொரோனாவால் மரணமடைகின்றனர் என்ற செய்தியை மட்டும் பார்க்காமலா இருப்பார்கள்? பார்த்தும் ஏன் எந்த தடுப்பு நடவடிக்கையுமே எடுக்கல? எடுக்க விருப்பம் இல்லையா? அல்லது எடுக்க தெரியலையா?

அதிகாரிகளை பொறுத்தவரை தங்களுக்கு கீழ் வேலை செய்த காவலர்களில் ஒருவர் குறைந்துவிட்டார் என்பதாகவே நினைத்துக் கொண்டு சாதாரணமாக கடந்து போய்விடுகிறார்கள்.

ஆனால் அந்த காவலரின் குடும்பத்தை பொறுத்தவரை குடும்ப தலைவனை இழந்துவிட்டு அனாதை ஆகிவிடுகிறது. அப்பா காவலராக வந்து பணி செய்து செத்து போனதற்கு அவருடைய சந்ததி ஒரு தலைமுறை வரை படிப்பிற்கும் உணவிற்கும் உடைக்கும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்க வேண்டுமா?

பணி வாங்கும் அக்கறையற்ற அதிகாரிகளே இறந்த காவலருக்கு நிவாரணம் வாங்கி கொடுக்க முயற்சி செய்ததுண்டா? செய்ய துப்பு இல்லேனா எவரையும் பணி செய்ய கட்டளையிடாதீர்கள்.

உனக்கென்னப்பா? சமையல் செய்ய, வீடு பெருக்க, தோட்ட வேலை பாக்க, குழந்தையை வளர்க்க என அத்தனை வேலைகளுக்கும் ஆர்டர்லி காவலர்கள் இருக்கிறார்கள்.

செத்து போன காவலரின் குடும்பத்திற்கு சோறு போட கூட யாருமில்லையே? ஆர்டர்லிகள் இல்லாமல் உங்கள் அன்றாட வாழ்வை நினைத்து பார்க்க முடிகிறதா உங்களால்? முடியாது எனும்போது குடும்ப தலைவன் இல்லாத காவலரின் குடும்பம் என்ன செய்யும்?

மாதாமாதம் ஒவ்வொரு காவலரின் சம்பளத்தையும் பிடித்து நிவாரணம் தர போறிங்களா? அப்போதும் காவலர்களே தான் காவலர்களுக்கு உதவிக்கனும். அரசிடம் நீங்க எதை தான் வாங்கி தருவீர்கள்?

முன்களபணியாளர்களே அல்லாத வருவாய் துறையினருக்கும், நீதித்துறை நடுவர்களுக்கும் அரசு கொரோனா மரணத்திற்காக நிவாரண உதவியாக 25 லட்சம் நிதி தரும்போது காவலர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன? உங்களது கையாலாகாத தனமா? அல்லது சங்கம் இல்லாத அனாதை துறை தானே எவன் கேட்பான் என்கிற அலட்சிய போக்கா?

இதை கேட்க ஒவ்வொரு காவலருக்கும் பயம். அப்படியே வளர்ந்து விட்டோம். வேலை போய்விடக் கூடாதே என்று பயந்து பயந்து உயிரை விட்டுக் கொண்டிருக்கிறோம் குடும்பங்களை அனாதையாக தவிக்க விட்டுவிட்டு. உயிர் போன பிறகு எங்கள் குடும்பங்கள் ஆதரவின்றி நடுத்தெருவில் அனாதையாக தான் நிற்குமெனில் நாங்கள் வேலையை விட்டுவிட்டு கடைசிவரை மூட்டை தூக்கியாவது எங்கள் குடும்பங்களை காப்பாற்றிக் கொள்கிறோம்.

வேலையே வேண்டாமென ஆயிரம் பேர் ரிசைன் செய்தால் என்ன செய்வீர்கள்? சிறையில் அடைப்பீர்களா அல்லது புதிதாக குடும்பமே இல்லாத களபலியாளர்களை எடுக்க அறிவிப்பு வெளியிடுவீர்களா?

சங்கம் இல்லாத துறைக்கு டிஜிபி தான் மாநில சங்க தலைவராக செயல்பட வேண்டும். எஸ்பி தான் மாவட்ட தலைவராக செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறாக இல்லாத பட்சத்தில் எங்களுடைய கோரிக்கையை எந்த அமைப்பு அரசின் காதுகளுக்கு எடுத்து செல்லுமோ அதை அமைத்துக் கொள்ள தான் ஒவ்வொரு காவலனும் போராடுவான்.

இப்போது கூட இதை எழுதியவனை கண்டுபிடிக்க தான் முயற்சி செய்வீர்களே ஒழிய தீர்வு தேட முயற்சி செய்ய மாட்டிங்க. கொரோனா வந்து அனாதையா செத்து போய்விட்டேன்னு நினைத்து கொள்கிறேன். அதற்காக கேள்வி கூட கேட்காமல் சாக விருப்பமில்லை என்பதால் எழுதுகிறேன்.

தயவுசெய்து காவலர்களின் குடும்பங்களையும் நினைத்து பாருங்க. காவலர்களுக்கு ஏன் என்று கேட்க வாய் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்திற்கு பசிக்கின்ற வயிறு இருக்கிறது. வாழ்வில் உயர வேண்டும் என்கிற கனவு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

இப்படிக்கு : கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பம் என்னாகுமோ என்ற பயத்தில் உள்ள காவலர்களில் ஒருவன்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பம் என்னாகுமோ என்ற பயத்தில் உள்ள காவலர்களில் ஒருவன்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பம் என்னாகுமோ என்ற பயத்தில் உள்ள காவலர்களில் ஒருவன்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil