வாரிசு அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது: தமிழக பாஜக தலைவர் முருகன்
திருவண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் தமிழக மாநில தலைவர் முருகன் தலைமையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வேலூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் முருகன் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றும் போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே தீங்கு செய்கின்ற கட்சி. அதனால் அது தீங்கு முன்னேற்ற கழகம். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று கூறினார்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், பாஜகவின் ஒரே இலக்கு தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். நாங்கள் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது கட்டப் பஞ்சாயத்து நில அகபரிப்பு ஊழல் போன்றவைகள் இருந்ததால் திமுக எக்காரணம் கொண்டும் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் குறியாக இருக்கிறோம்
திமுக தமிழர்களுக்கு எதிரானது என்றும் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தது திமுகவினர் என்று கூறியவர். தமிழ் கடவுள்களுக்கு எதிராக கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசிய கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக தான். அதன் காரணமாகத்தான் வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட்டது . திராவிடர் கழகம் தமிழ் கடவுளுக்கு எதிராகவும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிராகவும் தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்
தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று தமிழக மக்கள் எண்ணுகிறார்கள். திமுகவிற்கு தக்கப் பாடம் புகட்டுவதற்காக தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதியில் தமிழக மக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். திமுகவினர் கூட்டணி தர்மத்தை காக்க மாட்டார்கள் கூட்டணிக் கட்சியினரையும் மதிக்க மாட்டார்கள் என்று மேலும் அவர் கூறினார்.
அமமுக அதிமுகவுடன் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது அவர்கள் உட்கட்சி விவகாரம் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்று மழுப்பலாக பதில் அளித்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று கூறினார். மத்திய அரசு தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஆறு வருடங்களில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசின் திட்டங்களை கொடுத்திருப்பதாகவும் தற்போதைய பட்ஜெட்டில் கூட ஐந்து லட்சம் கோடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்
வாரிசு அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நிச்சயமாக வாரிசு அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது என்று பதிலளித்தார்.
சட்டமன்ற தேர்தலில் கட்சி கூறும் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu