கோவையில் நாளை துவங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவையில் நாளை துவங்கும் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்
X

கோவையில் பெண்களுக்கான வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை துவங்க உள்ளது.

பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நாளை முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து வுஷு அமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சபீர் கூறுகையில் மத்திய அரசின் விளையாட்டு துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் பெண் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. வடக்கு மண்டல அளவிலான போட்டிகள் உத்ரகாண்ட் மாநிலத்திலும், கிழக்கு மண்டல அளவிலான போட்டிகள் அஸ்ஸாம் மாநிலத்திலும், மேற்கு மண்டல அளவிலான போட்டிகள் கோவாவிலும் மற்றும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறுகின்றன.

அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை "ஆஸ்மிதா" அமைப்புடன் தமிழ்நாடு வுஷு அசோசியேஷன் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகின்றனர்.

இதில் மொத்தம் 9 மாநிலங்களில் இருந்து சுமார் 600 வீராங்கனைகள் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். மண்டல அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பண முடிப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story