ஆடி வெள்ளி மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு பெறுகிறது?

ஆடி வெள்ளி மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு பெறுகிறது?
X
மற்ற வெள்ளிக்கிழமைகளை விட ஆடி வெள்ளி மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு பெறுகிறது என்பதற்கான விளக்கங்கள் உங்களுக்காக

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. ஆடி மாதத்தை 'சக்தி மாதம்" என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம் போன்றவை விமர்சையாக நடக்கும்.

கோவில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது.

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

எந்தவிதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம்பெறுவதில்லை. ஆடி முதல் வெள்ளி மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும், கோவில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். திருமண பாக்கியம் கைகூடிவரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால், வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வதால் நன்மை தேடி வரும்.

சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி மாதத்தில் வெள்ளியன்று புற்று அம்மனான நாகதேவதையை வழிபடுவது சிறப்பானது.

இன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள்பவள் பாலா. வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். சர்வசக்தி குழந்தை வடிவான வாலை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி திருத்தலம் சென்று வழிபடுவதும் இவைகளை வழங்குதல் சிறப்பு. இயலாவிடில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

Tags

Next Story