ஆன்மிகம் அறிவோம்: பிரம்ம முகூர்த்தம் சிறப்பு
சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தல் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம் உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது. அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.
இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu