நாளை தைப்பூச விழா: இந்த நாளுக்கு இப்படியொரு சக்தியா?
தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துலங்கும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது வெறும் வாய்மொழி வார்த்தை கிடையாது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில், பௌர்ணமியும் சேர்ந்து வருகிற நாளைத்தான், நாம் முருகனுக்காக தைப்பூசத் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
ஆனந்தக் கூத்தனின் ஆனந்தத் தைப்பூசம்:
சிவலோக ஆனந்தக் கூத்தன், சிதம்பரத்தில் நிலைபெற்ற நடராஜர் திருநாள் - தை பௌர்ணமி பூசம் நட்சத்திரம். கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம், மார்கழித் திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய இறுதி ஐந்து தமிழ் மாதங்களும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சிவ பரம்பொருள் திருவிழாக்கள்.
மார்கழித் திருவெம்பாவையும், மாசி மகா சிவராத்திரியும் இம்மாதங்களில் வரும் இரண்டு சிறப்புத் திருவிழாக்கள். முருகன் என்ற ஒரு தெய்வமே இல்லாத காலத்திய ஊழி முதல்வன், ஐந்தொழில் ஆடல் நாயகனின் திருநாள் தைப் பூசம்.
தைப் பூசம் காணாதே காணாதே
போதியோ பூம்பாவாய் பூச நாம் புகுதும்
புனல் ஆடவே (சம்பந்தர்)
**
தையில் நீராடிய தவம்
தலைப்படுவாயோ (சங்க காலக் கலித்தொகை)
என கார்த்திகை தீபம், மார்கழித் திருவாதிரை போன்றே தைப் பூசமும் பழங்காலத்தில் இருந்து இலக்கியங்களில் சிறப்பிக்கப்படுகிறது.
ஆனந்தம் ஆடு அரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம்
ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே (திருமந்திரம்)
**
ஆனந்தக் கூத்தன் அருள் பெறில்
நாம் அவ்வணமே
ஆனந்தமாகி நின்று ஆடாமோ (திருவாசகம்)
என ஒவ்வொரு துவக்கத்திலும் படைக்கப்படும் புதிய உலகமும், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், சக்தி, லட்சுமி, சரசுவதி முதல் புல் வரையிலான உயிரினங்களும் ஆனந்தமாக இயங்குவதற்காக என்றும் நிலைத்துள்ள ஒளி மயமான சிவலோகத்தில், ஆனந்தமே சபையாக, ஆனந்தமே பாடலாக, ஆனந்தமே இசைக் கருவிகளாக ஆடும் ஐந்தொழில் நாயகன், ஆனந்தக் கூத்தன் பூமியில் முதல் முதலாக ஆடிய இடம் தில்லை அம்பலம்
தரிசனம் தந்த நாள்
பிரம்ம லோகம், வைகுண்டம் முதலிய எந்த உலகமும் அரி, அயன், அம்மன் உள்ளிட்ட எந்த தெய்வங்களும் இல்லாத ஊழி முதல் வடிவத்தைப் பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்கள், கடலோரம் இருந்த ஆகாயத் தலமான சிதம்பரத்தில், தில்லை வனத்தில் தில்லை மரத்தடியில் ஆகாய லிங்கத்தை, ஆதி மூல லிங்கத்தைப் பூஜித்து, முதல்முதலாகக் கண்டு களித்தார்கள். இரண்டு முனிவர்களுக்கும், எம்பெருமான் பரம சிவம் ஆனந்தக் கூத்து தரிசனம் அருளிய நாள், தை மாதம் பூச நட்சத்திரம் பௌர்ணமி திதி.
இதனால் கார்த்திகை சோம வாரம் போல், தை ஞாயிற்றுக் கிழமைகளும் தைப் பூசமும் சிவ பூஜைக்குச் சிறப்பாக உள்ளன. இரண்டு முனிவர்களுக்குப் பிறகு அரி அயன் அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் எல்லாம், தில்லை அம்பலத்தைப் பொன் வேய்ந்து வழிபட்டு ஆனந்தக் கூத்து கண்டு மகிழ்ந்த நாளாகிய மார்கழித் திருவாதிரையை விடச் சிறப்பாகத் தைப்பூசம் கொண்டாடப்பட வேண்டும்.
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்
தைப் பூசம் காணாதே காணாதே போதியோ பூம்பாவாய்
பூச நாம் புகுதும் புனல் ஆடவே (தேவாரம்)
என்று தெய்வ மழலை இரண்டு திரு விழாக்களையும் சிறப்பிக்கிறார். திருவிடை மருதூர் மகா லிங்கத் திருக்கோயிலில் தைப் பூசம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை சம்பந்தர் தேவாரம் போற்றுகிறது. திருவாதிரை போன்றே தைப் பூசமும் பழங் காலத்திலிருந்து எல்லா இலக்கியங்களிலும் சிறப்பிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu