சனிபகவான் கோயிலில் இப்படியா? கொந்தளிக்கும் இந்து எழுச்சி முன்னணி

சனிபகவான் கோயிலில் இப்படியா?  கொந்தளிக்கும் இந்து எழுச்சி முன்னணி
X

குச்சனூர் சனி பகவான் கோவில்( பைல் படம்)

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை என்ற பெயரில் வழிப்பறி நடப்பதாக புகார் எழுந்துள்ளது

தேனி மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற குச்சனூர் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவில் செயல் அலுவலருக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: புரட்டாசி சனி மற்றும் முக்கிய தினங்களிலும் பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் பூஜைக்காக வாங்கும் பூஜை பொருட்கள் எள்தீபம் விலை ரூபாய் 120. சூழலுக்கு ஏற்ப இதனை 100 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

மேலும் சாமிக்கு படைக்கும் எண்ணெய், பூஜை துணி, அபிஷேக பொருட்கள், மறு சுழற்சி முறையில் மீண்டும், மீண்டும் விற்பனை செய்து பக்தர்களிடம் பணம் வசூலித்து வருகிறார்கள். இச்செயலானது பக்தர்களை மிகுந்த மனவேதனை அடைய வைத்திருக்கிறது. மேலும் விற்பனையாளர்கள் வெளிமாவட்டத்தை சார்ந்தவர்கள் என்ற தகவலும் வருகிறது.

ஏன் இப்படி அதிக விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டால் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்துதான் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்ற தகவலை சொல்கிறார்கள். மன நிம்மதியை தேடி வரும் பக்தர்களுக்கு இச்செயல் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

எனவே செயல் அலுவலர் துரித நடவடிக்கையின் மூலம் பூஜை பொருட்களை விலை நிர்ணயம் செய்து விலைப்பட்டியல் வைக்கவும், விலை குளறுபடிகளை சரி செய்ய முன் வர வேண்டும். தவறும் பட்சத்தில் பக்தர்களை ஒன்று திரட்டி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரியப்படுத்தி கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!