பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு : அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு :  அரசு மருத்துவமனையில் அனுமதி
X

சிவசங்கர் பாபா 

பாலியல் புகாரில் நீதிமன்ற காவலில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நேற்று மாலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சிறையில் உள்ள அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை கடவுளின் அவதாரம் என கூறி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவங்கர் பாபாவை, டெல்லியில் சிபிசிஐடி போலீசார், நேற்று முன் தினம் கைது செய்தனர். பின்னர், விமானம் மூலம், அவரை சென்னை அழைத்து வந்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவல கத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு பிறகு, சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் வருகின்ற 1 ஆம் தேதிவரை 15 நாட்கள் செங்கல்பட்டு கிளைச்சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இன்று காலை முதல் திடீரென சிவசங்கர் பாபாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு தற்போது அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு போன்றவை அவரது உடலில் அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும், மேலும் இதய நாடித்துடிப்பு, 40 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் சிவசங்கர் பாபாவை மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகாகியுள்ளது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!