தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
தமிழிசை சௌந்தர்ராஜன்
தென் சென்னையில் அதிமுக சார்பாக ஜே. ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் களமிறங்குகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். 2014 லோக்சபா தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தொழில் ரீதியாக மருத்துவராக உள்ளார். டாக்டர் ஜே ஜெயவர்தன் 26 வயதில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்று அப்போது பிரபலம் அடைந்தார்.
இப்போது மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 5,64,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் இல்லாத நிலையில் எடப்பாடிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு போதுமான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து எடப்பாடியின் குரலாக இருக்கும் ஜெயக்குமாருக்கு இந்த முறை மீண்டும் ஆதரவு அளிக்கும் விதமாக அவரின் மகனுக்கு எம்பி சீட் வழங்கப்பட்டு உள்ளது.
இன்னொரு பக்கம் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னையில் களமிறங்கி உள்ளார். இதற்காக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். மீண்டும் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து தற்போது தென்சென்னை பாஜக வேட்பாளராக இவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் தென் சென்னை லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த சுரேஷ் குமார் என்பவர் மூலம் அக்னி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் , தென்சென்னையில் திமுக கூட்டணி 45% வாக்குகளை பெற்று வெல்லும். அதிமுக கூட்டணி 30 % வாக்குகளை பெறும். பாஜக கூட்டணி 20 % வாக்குகளை மட்டுமே பெறும். நாம் தமிழர் 4% வாக்குகளை மட்டுமே பெறும். மற்றவர்கள் 1% வாக்குகளை பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுத்துள்ள பா.ஜ.க.,வினர் மத்திய உளவு அமைப்புகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தமிழிசை மிகவும் பெரும்பான்மை ஓட்டுகளோடு வெற்றி பெறுவார் என உறுதியாக நம்புவதாக தெரிவித்தனர்.
கருத்து கணிப்பு என்ற பெயரில் சிலர் மக்களை குழப்புகின்றனர். தென்சென்னை அதிகளவில் மேல்தட்டு மக்கள் வாழும் தொகுதி. இங்கு தமிழிசைக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. கடந்த முறை இருந்த தி.மு.க., எம்.பி., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் முடிவில் நாங்கள் கூறியது எந்த அளவு உண்மை என்பது தெரியவரும் என்றும் பா.ஜ.க.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu