அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?
X

அயோத்தி ராமர் கோவில் (கோப்பு படம்).

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கிறது இந்த அரசியல் விமர்சன கட்டுரை.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பை நிராகரிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதலில் ‛‛ராம்.. ராம்'' என கோஷமிட்ட காங்கிரஸ் தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவில் அந்த கட்சி பின்னடைவை சந்திக்குமா? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் ராமர் கோவில் அழைப்பை நிராகரிப்பதாக 3 பேர் சார்பில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஏற்கனவே ராமர் கோவில் விழாவில் பங்கேற்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் தெரிவித்து உள்ளனர். அந்த வரிசையில் 3வதாக காங்கிரஸ் இணைந்துள்ளது

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதனை அரசியலுக்கு பயன்படுத்துவது என்பது சரியானது அல்ல. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. அயோத்தி ராமர் கோவில் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. கோவில் முழுவதுமாக கட்டி முடிக்காத நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அதனை அவசரமாக திறக்கிறது. இதனால் ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் நிகழ்ச்சியின் அழைப்பை நிராகரித்துள்ளனர்'' என கூறப்பட்டு இருந்தது.

ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பான கேள்விகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர்கள், ‛‛ராம்.. ராம்..'' எனக்கூறி வரவேற்றனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் ராமர் அனைவருக்குமானவர். அவர் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் உரித்தானவர் இல்லை'' என பொதுவெளியில் கூறினார். இதேபோல் மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோவில் கட்டுமானத்தை வரவேற்றனர். ஆனால் இப்போது காங்கிரஸ் மேலிடம் வேறு மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தற்போது புதிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ராமர் கோவிலை பொறுத்தமட்டில் பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியாக கூறி நிறைவேற்றி உள்ளது. தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அது பா.ஜ.க.வுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிளஸ் பாயிண்டாக அமைகிறது. மாறாக இது காங்கிரஸ் கட்சிக்கு மைனஸாக அமையலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் காங்கிரஸை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சி என பா.ஜ.க. கூறி வருகிறது. தற்போதைய விழா புறக்கணிப்பையும் பா.ஜ.க. கையில் எடுத்து வடஇந்திய மாநிலங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரசார யுக்தியாக பயன்படுத்தலாம். இதனால் வடமாநிலங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்படுமா? என்ற பிரதான கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இதற்கு 2 வகையான பதில்களை அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்தியாவில் இந்துத்துவா என்ற கொள்கையின் அடிப்படையில் வாக்கு செலுத்துவோர் எப்போதும் பா.ஜ.க.வின் பக்கம் தான் நிற்பார்கள். இவர்களின் ஓட்டுகள் பிற கட்சிகளுக்கு எப்போதும் கிடைக்காது. உதாரணமாக பா.ஜ.க.வுக்கு நிகராக பிற அரசியல் கட்சிகள் ராமர் கோவில் உள்ளிட்ட இந்து மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்றாலும் அந்த குறிப்பிட்ட மக்களின் ஓட்டுகள் என்பது பா.ஜ.க.வுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை காங்கிரஸ் மேலிடம் நன்கு உணர்ந்துள்ளது. தற்போது ராமர் கோவில் விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றாலும் கூட அது வரும் தேர்தலில் அந்த கட்சிக்கு கூடுதல் ஓட்டுக்களை பெற்று தராது. மாறாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை ஓட்டுகள் வேறு கட்சிக்கு செல்லலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி பங்கேற்காவிட்டால் அதற்கான ஓட்டு வங்கியாக இருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுகளும், காங்கிரஸின் கொள்கையை விரும்பும் இந்துக்களின் ஓட்டுக்களும் நிச்சயம் கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர்.

மேலும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கு வங்க மாநில முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தேர்தலின்போது ‛ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டார். ஆனாலும் அவருக்கு வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. இதனை உணர்ந்தே காங்கிரஸ் இப்படியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் இந்த விழாவில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் மதசார்பின்மை மீது காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளதை அவர்கள் வெளிக்காட்ட நினைக்கின்றனர்.

அதேவேளையில் இன்னொரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அது என்னவென்றால் இந்த விஷயத்தில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களின் நிலைப்பாடு என்பது வேறுவிதமாக இருக்கிறது. அதாவது ராமர் கோவில் விழா புறக்கணிப்பு என்பது உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிக்கலாம் என மேலிடத்திடம் எச்சரித்துள்ளனர். ஆனால் மேலிடம் அதனை கண்டுக்கொள்ளாத நிலையில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் விழாவில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். இதனால் ராமர் கோவில் விழா புறக்கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சி இப்படி இக்கட்டான பிரச்சனையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பூமிபூஜையை காங்கிரஸ் புறக்கணித்தது. அதன்பிறகு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் விழாவையும் புறக்கணித்தது. இந்த 2 விஷயங்களிலும் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என பா.ஜ.க.வினர் வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வகையில் தற்போதும் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோவில் விழாவை புறக்கணித்தை நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரிய அளவில் பூதாகரமான விஷயமாக மாற்றி பிரசாரம் செய்யலாம். இருப்பினும் அது காங்கிரஸ் கட்சியை பாதிக்குமா? பாதிக்காதா? அல்லது பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை மேலும் பெருக்குமா? என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!