பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி வைத்தார்?
ஆர் பி உதயகுமார்
முன்னாள் அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி., உதயக்குமார் கூறியதாவது: குடும்பத்தில் சில பிரச்னைகள் வருவது போன்றே அ.தி.மு.க.,விலும் சில பிரச்னைகள் வந்து சென்று கொண்டிருக்கின்றன. அவ்வளவு தான் ஆனால் அ.தி.மு.க., என்ற வலுவான இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுகிறார். அ.தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மக்கள் சேவையில் எந்த சுணக்கமும் காட்டவில்லை. கடந்த முறை தி.மு.க., எதிர்கட்சியாக இருந்த போது, சமூக ஆர்வலர்கள் என்ற ஒரு குழுவை அமைத்து, தி.மு.க., அவர்கள் மூலம் போராட்டங்களை துாண்டி விட்டு, பிரச்னைகளை கிளப்பி குழப்பம் செய்தது.
ஆனால் அ.தி.மு.க., மிகவும் தெளிவாக உள்ளது. மக்கள் பிரச்னைக்காக தானே நேரடியாக களம் இறங்கி போராடுகிறது. போராட்டம் நடத்தவும், மக்களுக்கு தேவையானதை பெற்றுத்தரவும் எந்த ஒரு ஏஜண்ட்களையும் வேலைக்கு அமர்த்தவில்லை. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவது, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்ற பல பிரச்னைகளில் அ.தி.மு.க., மக்கள் பக்கம் நின்று நியாயம் கேட்ட வருகிறது. தி.மு.க., பல விஷயங்களில் மக்களுக்கு எதிரான போக்கினை கடைபிடித்து வருகிறது. அ.தி.மு.க., நேரடியாக தி.மு.க.,வை எதிர்த்து போராடி வருகிறது.
பா.ஜ.க.,வுக்கு தமிழகத்தில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புமே கிடையாது. பூத் ஏஜண்டுகள் கூட அந்த கட்சிக்கு இல்லை. அண்ணாமலை பத்திரிக்கை, ஊடகங்களில் பேட்டி கொடுத்து நானும் ஒருவன் இங்கு இருக்கிறேன் என காட்டிக் கொள்கிறார். சமூக வலைதளங்களை அவர்கள் அதிகளவு நம்பி உள்ளனர். எங்கள் கட்சியின் செயல்பாட்டை பார்த்த தி.மு.க.வே மிகவும் கலக்கத்துடன் உள்ளது. சட்டசபையில் நாங்கள் பேசும் போது, ஒளிப்பரப்பையே துண்டித்து விடுகின்றனர். அந்த அளவு எடப்பாடியை பார்த்து தி.மு.க., பயந்து போய் உள்ளது.
தி.மு.க., மூன்றாண்டு சாதனை என எதையும் சொல்ல முடியாது. நீட் விவகாரம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கல், கல்விக்கடன் ரத்து என அத்தனை விஷயத்திலும் தி.மு.க., பெரும் தோல்வியை தழுவி விட்டது.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பாக்கு பாக்கெட்டை கொண்டு வந்த ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அத்தனை போதைப்பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன. உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுவதையும், தமிழகத்தின் வி.ஐ.பி.,க்களை கூட அவர்கள் எளிதில் சந்தித்து போட்டோ எடுத்து உறவாடி வருவதையும் நாம் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கோபேக் மோடி என்றவர்கள் தற்போது அவரையே அழைத்து வந்து விழா நடத்துகின்றனர். அ.தி.மு.க., தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் மட்டுமே இதற்கு முன்னர் பா.ஜ.க.,வுடன் உறவு வைத்திருந்தது. பா.ஜ.க., உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய தினகரன், இன்று அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார். அவர்கள் ஆதரவுடன் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
தேர்தலில் ஓ.பி.எஸ்., வென்றாலும், தினகரன் வென்றாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இரண்டு தனிநபர்களின் வாழ்வில் நடைபெறும் எந்த சம்பவங்களுக்கும் அ.தி.மு.க.,விற்கும் தொடர்பே இல்லை என்பது மட்டுமே உறுதி. அ.தி.மு.க., மிகவும் பலம் வாய்ந்த கட்சி. அதனை யாராலும் அசைக்கவே முடியாது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu