பா.ஜ.க., தலைவர்கள் ஜகா வாங்க காரணம் என்ன?
தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)
பாஜகவுடன் இந்தத் தேர்தலுக்கும் கூட்டு இல்லை, அடுத்த தேர்தலுக்கும் கூட்டு இல்லை என அதிமுக அறுதியிட்டுச் சொல்லிவிட்டதால் பாஜகவினர் போட்டு வைத்திருந்த அரசியல் கணக்குகள் எல்லாம் தவிடுபொடி ஆகியிருக்கின்றன.
அதனால் தான் தமிழக பாஜக தலைவர்கள் பலரும் தேர்தல் போட்டியிலிருந்து ஜகா வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தன்னால் தான் பாஜக வளர்ந்தது என்பதை நிரூபித்துக் காட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
"தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று தனது விருப்பத்தை வெளிப்படையாகவும் அவர் சொல்லி இருந்தார். இதையடுத்து, கோவை அல்லது கரூர் தொகுதியில் அண்ணாமலை களமிறங்கலாம் என்ற செய்திகளும் புகுந்து புறப்பட்டன. அண்ணாமலை கோவையை குறிவைத்ததற்கு அது அதிமுக கோட்டையாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவையை ஒட்டியுள்ள நீலகிரி தொகுதியை குறிவைத்தார். முன்கூட்டியே இதற்கு ஒப்புதல் அளித்துவிட்ட தலைமையும் முருகனை நீலகிரி தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கச் சொன்னது. கடந்த ஓராண்டாகவே நீலகிரி தொகுதியில் முருகன் பம்பரமாக சுற்றி வந்தார். மோடியையும் ஊட்டிக்கு அழைத்து வந்து பழங்குடியின மக்களிடம் பேச வைத்து பழங்குடி மக்களின் கவனத்தை பாஜக மீது திருப்பினார்.
இந்த இருவரின் கணக்குகளும் அதிமுக கூட்டணி கைகூடும் என்று நம்பி போடப்பட்டவை. பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருந்திருந்தால் திமுக வேட்பாளர்களுக்கு இவர்கள் கடும் போட்டியாக இருந்திருப்பார்கள். ஒருவேளை, இவர்களுக்கு வெற்றிகூட கைகூடி இருக்கலாம். ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக நிற்பதால் இவர்கள் இருவருமே இப்போது பின்வாங்கி இருக்கிறார்கள்.
அதிமுக வராவிட்டாலும் பாமகவும் தேமுதிகவும் எப்படியும் தங்களோடு இருப்பார்கள் என்று நம்பினார் அண்ணாமலை. ஆனால், அவர்களும் இப்போது தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது தேமுதிக. அதேபோல், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்" என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது பாமக.
இந்த இரண்டு சமிக்ஞைகளுமே இவர்கள் பாஜக கூட்டணிக்கு தயாராக இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் அதிமுக ராஜதந்திரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாமகவும் தேமுதிகவும் விரும்பும் ராஜ்யசபா சீட் உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு சம்மதிப்பதாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையிலேயே அதிமுக தெளிவாகச் சொல்லி விட்டதாகத் தெரிகிறது.
இப்படி, பெரிய கட்சிகள் எல்லாம் தங்களை பெரிதாக கண்டு கொள்ளாத நிலையில், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளிட்ட உபரி கட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. இவர்களை வைத்துக் கொண்டு போட்டியிட்டால் எத்தனை தொகுதிகளில் தங்களுக்கு காப்புத் தொகை திரும்பக் கிடைக்கும் என்ற கவலையும் பாஜக அனுபவஸ்தர்களுக்கு இருக்கிறது.
இப்படி நிலவரம் கலவரமாக இருப்பதால் தான் பாஜக தலைவர்களும் தங்களின் தேர்தல் ஆசைக்கு அணை போட்டிருக்கிறார்கள். அண்ணாமலை, முருகன் மாதிரியான முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கரைசேர முடியாமல் மோசமான தோல்வியைத் தழுவினால் அது கட்சிக்கும் சேதாரத்தை உண்டாக்கும் என்பதே பாஜகவின் இப்போதைய கவலை. அதனால் தான் எல்.முருகனை மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். அண்ணாமலையும், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
அதேசமயம், தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை பாஜகவை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்காட்ட வேண்டும் என்ற கவலையில் இருக்கும் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை வைத்து வலுவான கூட்டணியை அமைக்கத் துடிக்கிறது.
அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை விட அரவணைக்கத் துடிக்கும் அதிமுகவே மேல் என்ற நிலைக்கு தேமுதிகவும் பாமகவும் வந்திருக்கின்றன. அதற்குக் காரணம், அதிமுக மீதிருக்கும் நம்பகத்தன்மை தான். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி தோற்றுப் போனார். ஆனாலும் பேசிய ஒப்பந்தப்படி அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது அதிமுக. ஆனால், தேமுதிகவுக்கு தருவதாகச் சொன்ன ராஜ்யசபா சீட்டை பாஜக தரவில்லை. அன்புமணிக்கு அமைச்சர் பதவியும் தரவில்லை. அதிமுகவை விட பாஜக, கூட்டணியை கட்டமைப்பதில் மிகவும் பின் தங்கிவிட்டது என்பதே கள நிலவரம்.
இதை உணர்ந்து தான் பாஜக தலைமையும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் தங்களது மத்திய அமைச்சரை ராஜ்யசபா மூலமாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu