தினகரன் முடிவால் யாருக்கு நன்மை? யாருக்கு நஷ்டம்? ஒரு விரிவான பார்வை..!

தினகரன் முடிவால் யாருக்கு நன்மை?  யாருக்கு நஷ்டம்? ஒரு விரிவான பார்வை..!
X

டிடிவி தினகரன் (கோப்பு படம்)

பாஜகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைத்துள்ளது யாருக்கு இலாபம்? அதனால் எந்த அணி பின்னடைவைச் சந்திக்கும்?

பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் தான் தினகரன் கூட்டணி அமைப்பார் என்பது கடந்த 6 மாதங்கள் முன்பாகவே தெரிந்த தகவல் தான். அதை இப்போது அவர் உறுதி செய்திருக்கிறார் அவ்வளவு தான். ஆரம்பத்தில் இரட்டை இலையை மீட்பதற்காகத் தர்ம யுத்தத்தில் இறங்கிய டிடிவி தினகரன், ஒரு கட்டத்திற்குப் பிறகு அது நடக்காத காரியம் என்பதை உணர்ந்ததால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை 2018இல் தொடங்கினார்.

ஆரம்பத்தில் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் போன்றவர்கள் அவருடன் இணைந்து மிகத் தீவிரமாக எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தனர். அதில் வெற்றிவேல் மறைந்து விட்டார். அதன்பின்னர் தங்க தமிழ்செல்வன் திமுக பக்கம் போய்விட்டார்.

அமமுகவின் பொருளாளராக இருந்த மனோகரன்கூட தாய்க் கழகமான அதிமுக பக்கம் சமீபத்தில் வந்து விட்டார். இப்படி தொடர்ந்து டிடிவி தினகரனுக்குச் சரிவுகள் தான். ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது அவர் அறிமுகப்படுத்திய '20 ரூபாய்’ ஃபார்முலாவைக் கொண்டு அங்கே அவர் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் ஊடகங்கள் அவரை மிகப் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக்காட்டின. முதலில் டிடிவி தினகரனின் செல்வாக்கைச் சரிக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வந்த எடப்பாடி பழனிசாமி, மெல்ல மெல்ல அவர் மீது விழும் மீடியா வெளிச்சத்தைச் சரி கட்டி அவரை 'ஆஃப்’ செய்து விட்டார்.

இப்போது முன்பைப்போல டிடிவி தினகரன் கட்சி ஆக்டிவ் ஆக இல்லை. தொடக்கத்தில் அதிமுகவுக்குள் தங்களின் 'சிலீப்பர் செல்'கள் இருப்பதாகப் பேசி வந்த அவருக்கு அதிமுகவுக்குள் அப்படி எந்த உளவுப் படையும் இல்லை என்பது போகப்போக நிரூபணமாகி விட்டது.

அதன்பிறகு அவர் எதை வைத்து அதிமுகவை வீழ்த்துவது என்பது தெரியாமல் தவித்து வந்தார். அதிமுக ஒரு பக்கம் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமி கையிலிருந்தது. கூடவே மத்திய அரசின் ஆதரவும் எடப்பாடிக்கு இருந்தது. இந்த இரண்டு பெரிய சமுத்திரங்களை நீந்திக் கடப்பது டிடிவி தினகரனுக்கு முடியாத காரியமாக இருந்தது. ஆகவே ஒரு கட்டத்திற்கு மேல் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்படி அவரிடம் செல்வாக்கும் இல்லை. செலவுக்குத் தேவையான அளவு பணமும் இல்லை. மேலும் அவருக்கு ஆதரவாக எந்த ஆளும் கட்சியின் உதவியும் இல்லை. இதை உணர்ந்து தான் சில மாதங்களாக அவர் உட்கட்சியைக் கட்டமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். உண்மையைச் சொல்லப்போனால், அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்பேன் என்ற இலட்சியத்தைக் கைகழுவி விட்டு, அவர் தனிக் கட்சி என்று போன பிறகு பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

அவரது கட்சியின் தலைவராக வி.கே. சசிகலா தான் இருந்து வருகிறார். ஆனால், அந்தக் கட்சிக்காக எந்தச் செயல்களிலும் அவர் ஈடுபட்டதே இல்லை. அவர் அதிமுக தான் என் கட்சி எனச் சொல்லிக் கொண்டுள்ளார். அதிமுகவை இணைப்பேன் என்று பேசி வருகிறார்.

இதுவே டிடிவி தினகரனுக்குப் பின்னடைவு தான். இதை எல்லாம் உணர்ந்துதான் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்திருக்கிறார். பொதுவாக பாஜக தலைவர்களிடம் நேரடியாகப் போய் சந்திப்பு நடத்திய பிறகே கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். ஆனால், பாஜக மேலிடப் பொறுப்பாளர்களைச் சந்திக்காமலே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

கூடவே தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றால் கடந்த மூன்று மாதங்கள் முன்னதாகவே தேர்தல் பணிகளை ஏன் தொடங்க வேண்டும்? தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து களப்பணியில் ஏன் ஈடுபட வேண்டும்? இவை எதற்கு நம்மிடம் பதில் இல்லை. டிடிவி தினகரனிடமே பதில் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் 2019இல் வந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர், இப்போது கட்சி தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகப்போகும் சூழலில், நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டிய தேவை என்ன? தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்கக் காரணம் என்ன? சட்டசபைத் தேர்தலை மட்டும் மனதில் வைத்துச் செயல்படுவோம் என அவர் முடிவு செய்துள்ளதாக அவரது கட்சியினர் சொல்கிறார்கள்.

சட்டசபையில் போட்டியிடும் ஒரு கட்சி மக்களவையில் போட்டியிடக் கூடாது என்று நினைக்குமா என்ன? அத்துடன் பாஜகவுடன் கடந்த ஆறு மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்கிறார். அதிமுக -பாஜக கூட்டணி கடந்த செப்டம்பர் மாதம் தான் முறிந்தது. அந்தக் கூட்டணி முறிந்தே இன்னும் முழுமையாக 6 மாதங்களாகவில்லை. அப்படி என்றால், அதிமுக கூட்டணி இருந்தபோதே பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தாரா டிடிவி தினகரன்?

கடந்த 2019 5% வாக்குகளைப் பெற்று இருந்த அவரது கட்சி 2021இல் 2% அளவுக்குச் சரிந்தது. சட்டசபைத் தேர்தலில் 125 இடங்களில் ஒரு இடத்தைக் கூட அவரால் வெல்ல முடியவில்லை. கோயில்பட்டியில் கடம்பூர் ராஜுவிடம் தோற்கும் அளவுக்குத்தான் அவரது செல்வாக்கு இருந்துள்ளது. அவரது கட்சி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும் அதிமுகவை 25 தொகுதிகளில் வெற்றி பெற விடாமல் தடுத்துள்ளது என்பது உண்மை.

அந்தக் கதை இந்த மக்களவைத் தேர்தலில் நடக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் அவர் அதிமுகவின் ஓட்டுகளைத்தான் பிரிக்க முடியும். இந்தத் தேர்தலில் அதுவும் நடக்கும். அவர் பாஜக கூட்டணியை ஆதரிப்பதால் தேனி தொகுதி கிடைக்காது. அதற்காக எவ்வளவு கோடிகளையும் செலவழிக்க ஒபிஎஸ் மகன் தயாராக இருக்கிறார். எனவே டிடிவியின் அந்தக் கனவு நிறைவேறாது.

ராமநாதபுரம் மீது பாஜக கண் வலுவாகப் பதிந்துள்ளது. பாஜகவே அந்தத் தொகுதியை டிடிவிக்கு கொடுக்க முன்வராது. இந்த இரண்டையும் விட்டால் சிவகங்கை தொகுதியை டிடிவி தினகரன் கேட்கலாம். அங்கே திமுகவின் பெரிய தலைகளான ராஜ கண்ணப்பன் அல்லது பெரிய கருப்பன் ஆதிகம் அதிகம். அவர்களைத் தாண்டி தினகரன் வெல்வது கடினம். பல கோடிகளைச் செலவழித்தாலும் பாஜக வெற்றி பெறுமா என்பது சந்தேகம். கள நிலவரத்தை நன்கு அறிந்தவர் தினகரன்.

ஜெயலலிதா அரசியல் வாழ்க்கைக்கு அட்சாரம் போட்டுக் கொடுத்த குடும்பத்தின் பிரதிநிதி. ஆகவே அரசியல் கணக்கு எல்லாம் அவருக்கு அத்துப்படி. இதை எல்லாம் உணர்ந்துதான் ஜகா வாங்கி இருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டி இல்லை என்றார்.

இப்போது குக்கர் சின்னம் கேட்டு உரிய நேரத்தில் நாங்கள் விண்ணப்பித்து விட்டோம் என்று சொன்னவர், தேர்தலில் போட்டியிடவில்லை என்கிறார். இவரை விட ஒபிஎஸ் அணி அதிக வேகம் காட்டுகிறது. 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல் இவரது அணி. பாஜகவிடம் அளித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால் டிடிவி தினகரன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

“பல நாட்களாக என்னைக் கேட்டு வந்தீர்கள். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. வருமான வரித்துறையை யார் அனுப்ப முடியும்? மத்திய அரசுதான் அனுப்ப முடியும். சசிகலாவையும் என்னையும் அச்சுறுத்தி அரசியலைவிட்டு அகற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது” என்றார் டிடிவி தினகரன். அவர் பூனைக்குட்டி என்றது பாஜகவைத்தான். இப்போது அந்தப் பூனைக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்துள்ளார். அதற்கான பரிசு என்ன என்பது பலருக்கும் வெளிப்படையாகத் தெரியும்.

Tags

Next Story