அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?

அண்ணாமலைக்கு சிக்கல் :  பாஜவில் என்ன நடக்கும்?
X

பாரதிய ஜனதா கட்சி (கோப்பு படம்)

மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், கட்சியை என்ன செய்வார்களோ?’ என்கிற நடுக்கம் அக்கட்சி நிர்வாகிகளிடையே உருவாகி விட்டது.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, வெறும் முணுமுணுப்பாகவே இருக்கும் மனக்குமுறல்களெல்லாம், வார்த்தைகளாக வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்றனர் பாஜ மூத்த நிர்வாகிகள். தேர்தல் முடிந்ததிலிருந்து தமிழக பா.ஜ.க-வுக்குள்ளும் பற்றியெரிகின்றன பிரச்னைகள். ஏற்கெனவே, பணப் பட்டுவாடா பஞ்சாயத்தில் சிக்கி, பேரணாம்பட்டு ஒன்றிய பா.ஜ.க-வே கலைக்கப்பட்டிருக்கிறது.

கட்சியின் பல நிர்வாகிகள் மீதும் விசாரணைகள் தடதடக்கின்றன. குழப்பத்துக்கு மேல் குழப்பமாக, பிரதமரின் வேட்புமனு தாக்கலுக்கே போகாமல் புறக்கணித்து, கூட்டணிக்குள் ரோஷக் கடுப்பை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டார்கள் தினகரனும் பன்னீர்செல்வமும்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் தலைவர்கள் சிலர், “நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு மாவட்ட அமைப்புக்கும் பசையைப் பக்காவாகப் பிரித்து அனுப்பியது தலைமை. அதை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கட்சியின் சீனியர் புள்ளியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சில பெருங்கோட்டப் புள்ளிகளுடன் சேர்ந்துகொண்டு, பசை விவகாரத்தில் புகுந்து விளையாடிவிட்டார் அந்த சீனியர் புள்ளி.

போதாத குறைக்கு, கட்சி சார்பில் களமிறங்கிய 19 வேட்பாளர்களில், ஒருசிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் தலைமை சொன்னபடி பசையைக் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அவர்களும் விளையாடிவிட்டார்கள். அவையெல்லாம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தான், நடந்திருக்கும் குழப்பத்துக்கெல்லாம் முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், பொறுப்பைத் தட்டிக்கழித்து நழுவுகிறார் அவர். தேர்தல் முடிந்து இத்தனை நாள்களாகியும், ஒரு ஆய்வுக் கூட்டத்தைக்கூட அவர் நடத்தவில்லை.

வடமாநிலத் தேர்தல் பணிகள் என்று சொல்லிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். தான் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாநில அமைப்பைச் சீர்ப்படுத்துவதில் அவருக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அப்படி ஒதுங்கி ஓடுவதற்குக் காரணமும் இருக்கிறது.

ஆய்வுக் கூட்டத்தை நடத்தினால், முதல் கேள்வியே அண்ணாமலையை நோக்கித்தான் இருக்கும். ‘வலுவான கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வைப் பகைத்துக் கொண்டது ஏன்..?’ என்கிற கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பசை விவகாரத்தில் தொடங்கி, தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளடி வேலை பார்த்தவர்கள் வரையில், பல விவகாரங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

அதை எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், `தேர்தல் சுற்றுப்பயணம்’ என்கிற பெயரில் கிளம்பி விட்டார் அண்ணாமலை. அதில், சீனியர்களும் அப்செட்தான். அண்ணாமலை மீது வழக்கு பதிய தமிழக அரசு ஒப்புதல் அளித்த போது, அவருக்கு ஆதரவாகப் பேசுவதற்குப் பலரும் முன்வரவில்லை.

வாரணாசியில், பிரதமரின் வேட்புமனு தாக்கலுக்கு வரச் சொல்லி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருக்கும் தலைவர்கள் பலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஒரு மாநிலத் தலைவராக, தமிழகத்தில் கூட்டணியிலிருக்கும் கட்சித் தலைவர்களை அண்ணாமலை தான் அழைத்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவேயில்லை. அந்தக் கடுப்பில், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் வாரணாசிக்குச் செல்லவில்லை.

செயல்படாத நிர்வாகிகள், பசையை அமுக்கிய பெரும்புள்ளிகள், கடுகடுத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் என ரொம்பவே அல்லாடித்தான் போயிருக்கிறது தாமரை. ஜூன் 4-ம் தேதி ரிசல்ட்டுக்குப் பிறகு, டெல்லி தலைமை எதிர்பார்த்த அளவு வாக்குகளும் சீட்டுகளும் தமிழகத்திலிருந்து கிடைக்காவிட்டால், பல அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கும். அந்த வகையில் மலையே கலக்கத்தில் தான் இருக்கிறார்.

அதேசமயம், கட்சிக்குள் உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகள்மீதான டெல்லி தரப்பின் நடவடிக்கைகள் நிச்சயம் காத்திருக்கிறது” என்றனர் விரிவாகவே.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!