5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!

5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
X

ஆந்திரமாநில காங்., தலைவர் ஓய்.எஸ்.ஷர்மிளா. (தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடன் பிறந்த தங்கை.)

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஐந்து ஆண்டுகளாக துாங்கிக் கொண்டிருந்தார் என அவரது தங்கை புகார் எழுப்பி உள்ளார்.

கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, 6 மாதங்கள் விழித்திருந்தார். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியோ மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கடந்த 5 ஆண்டுகள் தூக்கத்திலேயே இருந்துள்ளார் என ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா (ஜெகனின் தங்கை) தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் அனகாபல்லி மாவட்டத்தில் அவர் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது போயகராவ் பேட்டாவில் அவர் பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வந்திருந்தால், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். மாநில பிரிவினை மசோதாவில் இது தெரிவிக்கப்பட்டிருந்தும், பிரதமர் மோடியை இதுவரை யாருமே கேட்கவில்லை என்பது தான் உண்மை.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில சிறப்பு அந்தஸ்தை கொண்டு வருவோம் என்று ஜெகன் வாக்குறுதி அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் கொண்டு வந்தாரா ? இந்த 5 ஆண்டுகளில் ஒரு நாளாவது மாநில சிறப்பு அந்தஸ்துக்காக அவர் போராடினாரா? அதுவும் இல்லை.

ஆந்திர தலைநகரான அமராவதியையாவது கட்டி முடித்தாரா? அதுவும் இல்லை. குறைந்தபட்சம் ஆந்திராவுக்கு தலைநகரத்தைக்கூட கட்டி முடிக்காத முதல்வர் நமக்கு எதற்கு? தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அரசு ஆசிரியர் பணிக்கான அறிவிப்பை ஜெகன் வெளியிட்டு உள்ளார்.

கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, மீதமுள்ள 6 மாதங்கள் விழித்திருப்பார். ஆனால், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியோ 5 ஆண்டுகள் வரை தூங்கி உள்ளார். மதுவிலக்கை அமல்படுத்துவேன். இல்லையேல் 2024-ம் ஆண்டில் ஓட்டு கேட்க மாட்டேன் என ஜெகன் கூறினார்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் மலிவு விலை மதுபானங்களை, அரசு கடைகளில் விற்றார். அந்த மதுபானங்கள் மிகவும் ஆபத்தானது. அதனை குடித்து ஏராளாமானோர் உயிரிழந்துள்ளனர். இது ஜெகனுக்கு தெரியாதா? இவ்வாறு ஒய்.எஸ். ஷர்மிளா பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!