கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (கோப்பு படம்)
தேர்தல் தொடர்பாக சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறதோ இல்லையோ, மாவட்டச் செயலாளர்களுக்கு இடையிலும், முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலும் ‘ஃபேஸ் டைமில்’ நடக்கும் விவாதங்களுக்குக் குறைவில்லை. இந்தச் சூழலில் தான், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சரும், கட்சி சீனியருமான செங்கோட்டையன் வருத்தத்தில் இருப்பதாகச் செய்திகள் இறக்கை கட்டின. அது தொடர்பாக செங்கோட்டையன் விளக்கமளித்து விட்டாலும், சூடு தணியவில்லை.
அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “செங்கோட்டையன் விவகாரம் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. அம்மாவின் மறைவுக்குப் பின்னர், முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் இருந்தவர்களுள் செங்கோட்டையனும் ஒருவர். ஆனால், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டார் இ.பி.எஸ்.
தற்போது, கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார். அவர் பொதுச்செயலாளரானதற்கு செங்கோட்டையனின் பக்கபலமும் இருந்தது. ஆனால், அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் செங்கோட்டையன் இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், சட்டமன்றக் கொறடா பதவிகளை செங்கோட்டையனைவிட ஜூனியரான வேலுமணிக்குக் கொடுத்திருக்கிறார் இ.பி.எஸ். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களில், தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் வேலுமணிக்கும் தங்கமணிக்கும் இடமளித்த இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரக்குழுவில் பத்து பேரில் ஒருவராகத்தான் செங்கோட்டையனை அமர்த்தினார்.
ஒருகாலத்தில், சிலுவம்பாளையத்தின் கிளைச் செயலாளராக இ.பி.எஸ் இருந்த போது, கொங்கு ஏரியாவின் முகமாக இருந்தவர் செங்கோட்டையன். அம்மாவின் பிரசாரப் பயணத் திட்டங்களை முழுவதுமாக வடிவமைத்தவர். அப்படிப்பட்டவர், தன்னைப் பின்சீட்டுக்குத் தள்ளிவிட்டு, வேலுமணிக்கு முன்சீட்டை இ.பி.எஸ் கொடுப்பதை ரசிக்கவில்லை. இ.பி.எஸ்-ஸை தன் தலைவராகவும் அவர் ஏற்கவில்லை.
‘அ.தி.மு.க பிளவுபடப்போகிறது. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு செங்கோட்டையன் வரலாம் என்கிறார்கள்’ என அமைச்சர் ரகுபதி குண்டை வீசியவுடன், அதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், ‘அ.தி.மு.க தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்துக்கு, நான் தூணாக நின்று பணியாற்றுவேன்’ என்றார். ஆனால், ‘இ.பி.எஸ் குறித்தோ, அவர்தான் கட்சியின் தலைவர்...’ என்றோ ஒரு வார்த்தைகூட அவர் சொல்லவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், செங்கோட்டையனின் மனநிலையில் தான் பல சீனியர்களும் இருக்கிறார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘கூட்டணி பலம் இல்லையென்றாலும், 5 முதல் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். 30 சதவிகிதத்துக்கு மேல் வாக்கு கிடைக்கும்’ என்று திடமாக நம்புகிறார் இ.பி.எஸ். அப்படி ஒரு வெற்றியைப் பெற்று விட்டால், சீனியர்களும் தன்னைத் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார். ஆனால், கள யதார்த்தம் அப்படியில்லை.
தேர்தலில் பல மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் ஒரு வேலையும் பார்க்காமல் நழுவி விட்டனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால்தான் கட்சி மீண்டெழும். அதை இ.பி.எஸ் தைரியமாகச் செய்வாரா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
‘2026 சட்டமன்றத் தேர்தலில், லோக்கலில் செல்வாக்குள்ள தலைகள் இருந்தால்தான், வெற்றி இலக்கை அடைய முடியும்’ என்று எண்ணுகிறார் இ.பி.எஸ். ஆகவே, ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தாலும், அந்த சீனியர்கள் மீது அவர் கைவைக்கப் போவதில்லை. இதனால், தொண்டர்களின் எதிர்ப்பையும் நிர்வாகிகளின் கோபத்தையும்தான் அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu