விருதுநகருக்கு குறி வைக்கும் விஜயகாந்த் மகன்
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர்
விருதுநகர் மக்களவை தொகுதியானது திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதி 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு வென்றார். அவர் பெற்ற வாக்குகள் 4.70 லட்சம் ஆகும். தேமுதிகவை சேர்ந்த அழகர்சாமி 3.16 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். வென்றவருக்கும் தோற்றவருக்கு வாக்கு வித்தியாசம் என்பது 1.54 லட்சம் தான். எனவே இந்த முறை விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனை களமிறக்கினால் நிச்சயம் வெற்றி காணலாம்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட கே.பாண்டியராஜன் 1.25 லட்சம் வாக்குகளை எடுத்து 3ஆவது இடத்தை பிடித்திருந்தார். விஜயகாந்த் இறப்புக்கு பல லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் வருகை தந்ததால் சென்னையே ஸ்தம்பித்தது.
சினிமா, அரசியல் எல்லாவற்றையும் தாண்டி அவருடைய மனிதநேயத்தையே அனைவரும் விரும்பினர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பொதுவாக அரசியலில் எப்போதும் அனுதாப அலைகளுக்கு மரியாதை உண்டு என்பார்கள்.
ஏற்கெனவே எம்எல்ஏவாகவோ எம்பியாகவோ இருந்து இறந்தவர்களின் உறவினர்கள் அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்கள். அந்த வகையில் விஜயகாந்தின் மகனுக்கு வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் இதை அனுதாப அலையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே அது நிச்சயம் இந்த லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். தேமுதிக கணிசமான தொகுதிகளில் வெல்லும். எங்கள் கட்சியை விஜயகாந்த் தெய்வமாக இருந்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்த் இறப்புக்கு வந்த கூட்டத்தை மக்கள் பார்த்துவிட்டு இத்தனை நல்லவருக்கு நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டோமே என மனம் வருந்தியிருப்பர். சினிமாவில் உணவு விஷயத்தில் சமத்துவத்தை ஆரம்பித்தவர் விஜயகாந்த்.
எங்கள் கேப்டன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாத அளவுக்கு அவர் நேர்மையின் சிகரமாக இருந்தார். தான் சம்பாதித்த பணத்தையே ஏழை எளியோருக்கு செலவு செய்தார். அவருடைய மகனை எம்பியாக்குவது எங்களின் கடமையாகும். இவ்வாறு தேமுதிகவினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும் அவர் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள ராமானுஜபுரத்தில் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது. அங்கிருந்து விஜயகாந்தின் தந்தை மதுரைக்கு இடம் பெயர்ந்து, ரைஸ் மில் தொடங்கினார் என்கிறார்கள். எனவே இந்த சென்டிமென்ட்டும் விஜய் பிரபாகரனுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu