ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா
ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடையவிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தாவின் மனுவிற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில், `வேந்தாந்தா'வின் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு, ஆலையை சீல் வைத்து மூடியது. தொடர்ந்து, ஆலையைத் திறக்க நீதிமன்றங்களின் கதவுகளைப் பலமுறை தட்டியும், `ஆலையை திறக்கக் கூடாது' என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்துவருகிறது. இந்தநிலையில், தற்போதைய கொரோனா இரண்டாவது அலையாக கோரத் தாண்டவம் ஆடிவந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. பல தனியார் அமைப்புகள் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கிவந்தன.
'ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாகத் தரத் தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' என மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது வேதாந்தா. பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துவந்ததால், வேதாந்தாவின் நீதிமன்ற முறையீடு கவனம்பெற்றது.
கடந்த மே 5-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆலையிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, இதுவரை சுமார் 650 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், 350 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடையவிருக்கிறது. இந்தநிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் ஆறு மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா.
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து 6 மாதம் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தாவின் மனுவிற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதால் ஆலையை இயக்க வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu