அரசுக்கு அழுத்தம் தந்து ஆட்சியை பிடிக்க முயல்வதா?எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
பாஜகவை சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து ஆட்சியை கைப்பற்ற முனையும் மத்திய பாஜக அரசு என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது அண்மையில் புதுச்சேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரெங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தலின் போதும், தேர்தல் முடிவின் போதும் முதல்வர் பதவிக்கு பாஜக முயற்சி செய்துவந்த நிலையில் ரெங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் புதுவை முதல்வர் ரெங்கசாமி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு செய்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களே பதவியேற்காத நிலையிலும் புதுவை முதல்வர் கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மிக அவசரமாக நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் ஆட்சியை பிடிக்கும் சதி எண்ணம் உள்ளதாகவே தெரிகிறது.
3 நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக வெற்றிபெற்றவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதுபோக மேலும் சில சுயேட்சைகளை பாஜகவில் இணைய வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதுவையில் ஆட்சியமைக்க பாஜக மறைமுக திட்டம் தீட்டி வருவது தெளிவாகின்றது.
புதுவையை பொறுத்தவரை நியமன எம்.எல்.ஏக்களை ஆட்சியில் உள்ள மாநில அரசிடம் கலந்தாலோசித்து அதன் பின்னரே நியமிக்க வேண்டும் என்கிற விதியை மாற்றி, மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் மூலம் பாஜகவை சேர்ந்தவர்களை எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த காங்கிரஸ் ஆட்சியை தாங்கள் நியமித்த எம்.எல்.ஏக்கள் துணையுடன் கவிழ்த்த மத்திய பாஜக அரசு, தற்போது அதே பாணியில் தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெங்கசாமி தலைமையிலான அரசுக்கு அழுத்தம் தந்து ஆட்சியை பிடிக்க முயல்வதாகவே தெரிகிறது. இத்தகைய ஜனநாயக விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசை தனது அதிகார துஷ்பிரயோகம் மூலம் மாற்றத் துடிக்கும் பாஜக அரசின் நடவடிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து முறியடிக்க முன்வர வேண்டும் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu