மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி, தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராக உள்ளார். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கட்சிப்பணி, தொகுதிப்பணிகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். பம்பரமாக சுழன்று வரும் அவருக்கு, விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளன.
அதிருப்தியில் ஸ்டாலின்!
இதுதொடர்பாக, சென்னை அறிவாலய வட்டாரங்களில் கூறப்படுவதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், அமைச்சரவையை மாற்றம் செய்ய, முதலமைச்சர் விரும்புகிறார். இதற்கு காரணம், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அவருக்கு திருப்தி இல்லை.
அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும், பிரத்யேக குழுவும் உளவுத்துறையும் கண்காணித்து, ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் சில அமைச்சர்களை கழற்றிவிட, முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். இதனால், ஒவ்வொரு அமைச்சரும், ஒருவித பதற்றத்துடன் தற்போது உள்ளனர். தலைமையின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடாது என்ற முனைப்பில் உள்ளனர்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்
ஏற்கனவே, அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்டோரின் செயல்பாடுகள், மு.க. ஸ்டாலினுக்கு கடும் எரிச்சலை தந்துள்ளது. எனவே, ஜூன் முதல் வாரத்தில் தனது தந்தை கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடும் தருணத்தில், அமைச்சரவை மாற்றம் செய்ய விரும்புகிறார்.
இம்முறை, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. கடந்த நான்கு மாதங்களாகவே உதயநிதியை அமைச்சர் ஆக்குவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. முழு நேர அரசியலில் களமிறங்க ஏதுவாக, சினிமாவுக்கு உதயநிதி முழுக்கு போடுகிறார். உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக, ஏற்கனவே துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்திவிட்டார்.
தாத்தா பிறந்தநாளில் பேரனுக்கு பரிசு!
உதயநிதிக்கு வலுவான, 'வளமான' இலாகா ஒதுக்கப்பட வேண்டும் என்பது, குடும்பத்தினரின் விருப்பமாக உள்ளது. ஆனால், இளைஞர்களை கவரக்கூடிய ஒரு துறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது, உதயநிதியின் ஆசை. இலாகா ஒதுக்கீடு விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவே இறுதியானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்று கசியும் தகவல், 'உடன்பிறப்புகள்' மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை கட்சியில் மட்டுமே அதிகாரத்தை கொண்டிருந்த உதயநிதி, இனி ஆட்சியிலும் அதிகாரத்தை கையில் எடுக்கப் போகிறார். ஜூன் 3ம் நாளில் தனது தாத்தா பிறந்தநாளில், மாண்புமிகு அமைச்சர் உதயநிதியாக இருப்பார் என்று, திமுகவினர் அசைக்க முடியாத நம்பிக்கையோடு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu