வெற்றி வாய்ப்புள்ள தேனி தொகுதி தி.மு.க., தாரை வார்க்குமா? தட்டி துாக்குமா?

வெற்றி வாய்ப்புள்ள தேனி தொகுதி  தி.மு.க., தாரை வார்க்குமா? தட்டி துாக்குமா?

முன்னாள் முதல்வர் இபிஎஸ்,இந்நாள் முதல்வர்  ஸ்டாலின், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

Theni Lokshaba Constiruency தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில் தேனியும் உள்ளது.

தேனி தொகுதியில் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க., காங்., கட்சிகள் மாறி, மாறி வென்றுள்ளன. கடந்த முறை தி.மு.க., தமிழகத்தில் அத்தனை தொகுதிகளிலும் வென்றாலும், தேனி தொகுதியில் அப்போது அ.தி.மு.க., வேட்பாளராக இருந்த ஓ.பி.ஆர்., வெற்றி பெற்றார். இதனால் தேனி தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை என மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் அடுத்து வந்த சட்டசபை தொகுதிகளில் தேனி மாவட்டத்தை கைப்பற்றி தி.மு.க., பெரிய சாதனை படைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக தலைவர் பதவியையும் கைப்பற்றியது. மாவட்டத்தில் அருதிப்பெரும்பான்மையான உள்ளாட்சிகள் தி.மு.க., வசம் உள்ளன.

இந்நிலையில் பா.ஜ.க.,வின் விஸ்வரூப வளர்ச்சி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் உள்ள அதிருப்தி, தி.மு.க., ஆட்சி மீது எழுந்து வரும் எதிர்மறையான விமர்சனங்கள் அதனால் எழுந்துள்ள அதிருப்திகள் என்று தி.மு.க.,விற்கு சில மைனஸ்கள் உள்ளது உண்மை தான். இருந்தாலும், தேனி தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க., மிகவும் வலிமையாக உள்ளது. காரணம் கல்லுாரி மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி, குடும்ப பெண்களுக்கு மாதாந்திர உரிமைத்தொகை தவிர கூட்டணி கட்சிகளின் பலம், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,வின் வலுவான கட்சி உள்கட்டமைப்பு, சிறப்பாக களப்பணியாற்றும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என தி.மு.க.,விற்கு பல பிளஸ்களும் உள்ளதை மறக்க முடியாது.

தேனி தொகுதியை பொறுத்தவரை முக்கிய கட்சியான அ.தி.மு.க., தற்போது நான்காக சிதறிக்கிடக்கிறது. தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட தேனி மாவட்டத்தில் பா.ஜ.க.,வின் வலிமை சற்று குறைவு என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. பா.ஜ.க.,வின் தேனி மாவட்ட நிர்வாகத்தில் கடும் அதிருப்தியான சூழல் நிலவுகிறது. தவிர பா.ஜ.க.,விற்கு வலிமையான கட்சி உள் கட்டமைப்புகள் இல்லை.

இந்த சூழலில் தி.மு.க., இதுவரை தேனி தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்.,கிற்கு வழங்கி வந்தது. காங்., கட்சிக்கு தேனி கிடைத்தால், அக்கட்சிக்கு ஒரு சீட் உறுதி என சொல்லலாம். அந்த அளவு வலிமையான சூழல் தேனி தொகுதியில் நிலவுவதால், சீட் வாங்கி விட காங்., கட்சியில் குடுமிப்பிடி சண்டையே நடக்கிறது.

இப்படி அல்வா மாதிரி சாதகம் நிறைந்த ஒரு தொகுதியை ஏன் கூட்டணிக்கு விட்டுத்தர வேண்டும். நாமே போட்டியிடலாமே என தேனி தொகுதி நிர்வாகிகள் மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உண்மையும் அது தான். தேனி தொகுதியில் காங்., வெற்றிக்கு தி.மு.க.,வின் உழைப்பும், பலமும், கூட்டணிகளின் பலமும் மட்டுமே அடிப்படை என்று தி.மு.க., நிர்வாகிகளுக்கு மிக நன்றாக தெரியும். இப்படிப்பட்ட ஒரு தொகுதியை நாம் இழந்து விட வேண்டாம். நிச்சயம் நாம் நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் மக்களை சந்திப்போம் என நிர்வாகிகள் தங்கள் மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

பா.ஜ.க., தரப்பில் உண்மையை உணர்ந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தேனிதொகுதியின் கள நிலவரம் தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ளது. நாம் வலுவான வேட்பாளரை நிறுத்தாவிட்டால் தொகுதியை இழந்து விடுவோம் என்று தங்கள் கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து விட்டனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பெயரை பரிந்துரைத்துள்ளனர். இவரை தவிர வேறு யார் என்றாலும் தொகுதி சூழல் நமக்கு ஒத்துழைக்காது என மேலிடத்தில் கூறி விட்டனர். இதனால் இப்போதே தேனி தொகுதியில் ஒரு தேர்தல் பரபரப்பு தொற்றி உள்ளது.

Tags

Next Story