40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு அலசல்..!

40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு அலசல்..!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,பா.ஜ.தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

‘நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்று பிரசாரத்தை வடிவமைத்து வெற்றி பெற்றார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நாடு இந்தியா கூட்டணிக்கு வசப்படவில்லை. தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணியின் பலத்தால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பா.ஜ.க. ஆனால், தமிழகத்தில் தருமபுரி, விருதுநகர் என்று சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பைக் கூட்டினாலும், முடிவில் 39 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறது தி.மு.க கூட்டணி.

புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சியே வென்று, ‘நாற்பதும் நமதே’ என தி.மு.க கூட்டணியை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

பா.ஜ.க பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை மண்ணைக் கவ்வச் செய்து எல்லாத் தொகுதிகளையும் வென்றிருக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் அந்த சாதனையைச் செய்திருக்கும் பெரிய மாநிலம் தமிழகம் மட்டுமே! அதனால்தான் டெல்லியில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்குச் சென்ற ஸ்டாலினுக்கு ராஜமரியாதை. ராகுல் காந்தி உட்பட பலருமே அவர் கருத்தைக் கவனத்துடன் கேட்டனர்.

நடந்து முடிந்த தேர்தலில், பெருத்த அடியை வாங்கியிருப்பது அ.தி.மு.க தான். “இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்தட்டிக்கொண்டாலும், தொண்டர்களின் வாக்குகள்கூட கட்சி வேட்பாளர்களுக்கு விழவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன தேர்தல் முடிவுகள்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க மற்றும் பா.ம.க போன்ற கட்சிகள் ஒரு இடம்கூடப் பெற முடியாமல் தோற்றிருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பிடித்திருக்கின்றன.

இரட்டை இலக்கத்தில், 11.24 சதவிகித வாக்குகளைப் பெற்று வளர்ந்திருப்பதாகச் சொல்கிறது பா.ஜ.க. அதேவேளையில், “பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் உடனிருந்ததால் கிடைத்த அந்த வளர்ச்சி நிலையானதா?” எனக் கமலாலயத்தில் களைகட்டியிருக்கிறது பட்டிமன்றம். இந்தத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகின்றன... ஒவ்வொரு கட்சியும் எங்கே சாதித்து, எங்கே சறுக்கியிருக்கின்றன? விரிவான அலசல் இதோ...

இந்தத் தேர்தல் முடிவுகள், தி.மு.க-வுக்குப் பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். 2004-ல், கருணாநிதி இருந்த போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் ‘ஸ்வீப்’ செய்தது தி.மு.க கூட்டணி. 20 வருடங்களுக்குப் பிறகு, அந்தச் சாதனையை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2018-ல், தி.மு.க தலைவரான பின்னர் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் என அனைத்திலுமே கட்சியைப் பெருவாரியாக வெற்றி பெற வைத்து, தொடர் சக்சஸ் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க-வின் தலைவர்கள் சிலர், “2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது தி.மு.க. அப்போதிருந்த அ.தி.மு.க அரசு மீது, பொது மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரிய கோபம் இருந்தது. கோயில்களில் ஆடு கோழி பலியிடத் தடை, எஸ்மா, டெஸ்மா சட்டப் பிரயோகம், நான்காண்டு அ.தி.மு.க ஆட்சிமீதான வெறுப்பு போன்றவற்றால், 40 தொகுதிகளிலும் நாங்கள் வென்றுள்ளோம். இப்போது ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு, அதே சாதனையை முதல்வர் சாதித்துக் காட்டியிருப்பது சவாலான விஷயம்தான். கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்றதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது.

‘தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என கூட்டணிக் கட்சிகளான வி.சி.க-வும் ம.தி.மு.க-வும் விடாப்பிடியாக நின்றபோது, ’சென்றமுறை உதயசூரியன் சின்னத்தில்தானே போட்டியிட்டீர்கள்... இப்போது என்ன?’ என தி.மு.க சீனியர்கள் முரண்டுபிடித்தனர். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்தார் முதல்வர்.

‘திருச்சியில் தீப்பெட்டிச் சின்னமும், விழுப்புரத்திலும் சிதம்பரத்திலும் பானைச் சின்னமும் வெற்றி பெற வேண்டியது, நம் பொறுப்பு’ என நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார். பிரசாரத்தின்போது, எவ்வளவோ மனமாச்சரியங்கள் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் எழுந்தபோது, அதையெல்லாம் சரிக்கட்டி, அனைவரையும் அரவணைத்துச் சென்றார். அதுதான் கழகத்தின் வெற்றிக்கு அடிப்படை. முதல்வரிடம் இருந்த பொறுப்புணர்வு சில அமைச்சர்களிடம் இல்லை.

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டாலும், சட்டமன்றத் தொகுதிவாரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, எடப்பாடி, சங்ககிரி, பரமத்தி வேலூர், குமாரபாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம், திருமங்கலம், அருப்புக்கோட்டை, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி ஆகிய 13 சட்டமன்றத் தொகுதிகளில் சறுக்கியிருக்கிறது தி.மு.க. அந்தத் தொகுதிகளில், எதிர்த்தரப்பு வேட்பாளர்களைவிட குறைவான வாக்குகளையே தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் அருப்புக்கோட்டைத் தொகுதியிலும் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியிலும் சறுக்கியதைத்தான் தலைமையால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதுதொடர்பான விசாரணையை அறிவாலயம் தொடங்கியுள்ளது.

கடந்த 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகையில், தி.மு.க பெற்ற வாக்குகள் ஆறு சதவிகிதம் வரை குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணமிருக்கிறது. கடந்தமுறை, 24 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., இந்தமுறை 22 தொகுதிகளில்தான் போட்டியிட்டிருக்கிறது. தவிர, நாங்கள் சுலபமாக வாக்குகளை அள்ளக்கூடிய திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கரூர் ஆகிய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியினர் இந்தமுறையும் பெற்றுக்கொண்டன. திண்டுக்கல்லையும் விட்டுக் கொடுத்தோம். கடும் போட்டி இருந்த தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, கள்ளக்குறிச்சித் தொகுதிகளில் தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்க வேண்டியதாகிவிட்டது. எங்களின் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு, இதுவும் ஒரு காரணம்” என்றனர் விரிவாக.

தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய வி.சி.க-வுக்கு, இந்தத் தேர்தல் ‘ஜாக்பாட்’ என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு தொகுதிகளில் சொந்தச் சின்னத்தில் வென்றிருப்பதால், மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் சிறுத்தைகள். ‘‘25 ஆண்டுக்கால தொடர்போராட்டத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற நிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எட்டியுள்ளது. பானைச் சின்னத்தையே எங்களின் நிரந்தரச் சின்னமாகக் கேட்கவுள்ளோம்’’ என்றிருக்கிறார் வி.சி.க-வின் தலைவர் திருமாவளவன். தி.மு.க கூட்டணியில், தமிழகத்தில் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டு, 10.67 சதவிகிதமாக தங்களின் வாக்குச் சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறார்கள் கதர்கள்.

தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு, ‘‘கடந்த தேர்தலைவிட இந்தமுறை அ.தி.மு.க-வின் வாக்குகள் அதிகரித்திருக்கின்றன. 2019-ல் இரட்டைத் தலைமையின் கீழ் பெற்ற வாக்குகளைவிட, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ், தற்போது ஒரு சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம்” எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள் இலைக்கட்சி நிர்வாகிகள். அவர்கள் சொல்வது கணக்கு அடிப்படையில் சரியானதுதான். ஆனால், போட்டியிட்ட இடங்களின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க-வின் வாக்குகள் சறுக்கியிருக்கின்றன.

2019 தேர்தலின்போது, 20 இடங்களில் போட்டியிட்டு 19.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது அ.தி.மு.க. இந்தத் தேர்தலில், 35 தொகுதிகளில் களமிறங்கி, வெறும் 20.46 சதம் வாக்குகளையே பெற்றிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளான புதிய தமிழகமும் எஸ்.டி.பி.ஐ கட்சியும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டன. அவர்களின் வாக்குகள் சேர்ந்தும்கூட, கடந்த முறையைவிட 15 தொகுதிகள் கூடுதலாகப் போட்டியிட்டும்கூட, அ.தி.மு.க-வின் வாக்குகள் ஒரு சதவிகிதத்திற்கு மேல் உயரவில்லை.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “தென்சென்னை, வேலூர், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட்டைப் பறிகொடுத்திருப்பது, தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனை தொகுதிகளில் டெபாசிட் பறிபோவது இதுவே முதல்முறை. 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குப் போய் விட்டது.

தென்மாவட்டத் தொகுதிகளில் பெரிய அளவில் சரிவைச் சந்தித்திருக்கிறது கட்சி. கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர் தேர்விலும், பூத் கமிட்டிப் பணிகளிலும் தொடக்கத்திலிருந்தே கோட்டை விட்டுவிட்டார் எடப்பாடி. ஓ.பி.எஸ் பிரிந்து சென்றதாலும், அவரும் அ.ம.மு.க-வும் பா.ஜ.க-வுடன் அணி சேர்ந்ததாலும், தென்மாவட்டங்களில் ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு டெபாசிட் பறிபோயிருக்கிறது.

இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் ஒப்படைத்த போதே, ‘பன்னீர் டெபாசிட்கூட வாங்கக்கூடாது’ எனக் கண்டிஷன் போட்டார் எடப்பாடி. உதயகுமாரும், ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக ஐந்து ஓ.பி.எஸ்-களைப் போட்டியிட வைத்து கடும் நெருக்கடியைக் கொடுத்தார். அப்படி இருந்தும்கூட, பலாப்பழச் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்று விட்டார் ஒரிஜினல் ஓ.பி.எஸ். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயபெருமாளுக்கு டெபாசிட் பறிபோனது தான் மிச்சம். விருதுநகரில், மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதிருந்த அனுதாப அலையால் தான், அங்கு ஓரளவுக்கு வாக்குகளைப் பெற முடிந்தது. இரட்டை இலையில் விஜய பிரபாகரன் போட்டியிட்டிருந்தால், அவருக்கும் சிக்கலாகியிருக்கலாம்.

1973-ல், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல்தான் அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். அதில், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் மாயத்தேவர். அன்றிலிருந்துதான் கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக இரட்டை இலை துளிர்விட்டது. கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த திண்டுக்கல்லில், தற்போது கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க.

தென்மாவட்டங்களில் மட்டுமல்ல, வடக்கிலும் கட்சிக்குச் சரிவுதான். தலைநகரிலேயே, கொளத்தூர், விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 13 சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க-வை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இந்தச் சரிவுக்குப் பொறுப்பான நிர்வாகிகள் களையெடுக்கப்படாதவரை, சரிவிலிருந்து கட்சி மீளப்போவதில்லை” என்றனர்.

இந்தத் தேர்தலில், தாறுமாறாக வாக்கு சதவிகிதத்தை உயர்த்திக்கொண்டிருப்பது பா.ஜ.க தான். 2014-ல் 5.56 சதமாக இருந்த வாக்கை, இந்தமுறை 11.24 சதமாக உயர்த்தியிருக்கிறது. 23 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டியிட்டதும், பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்-ஸின் வாக்குகள் கணிசமான அளவில் பா.ஜ.க-விற்கு மடைமாறியிருப்பதும், தாமரைக் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை இரட்டை இலக்கத்திற்குக் கொண்டுபோயிருக்கின்றன.

பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், “கூட்டணி பலத்தாலும் மோடி அரசின் திட்டங்களாலும் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், இது எதிர்பார்த்த வெற்றியல்ல. எட்டு முறை தமிழகத்திற்குப் பிரசாரத்திற்குப் பிரதமர் வந்தும், ஒரு சீட்கூட ஜெயிக்க முடியவில்லை என்பது வருத்தம்தான்.

அ.தி.மு.க கூட்டணியை உதறித் தள்ளியபோது, ‘25 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றுவிடுவோம். நான் கட்சியை வளர்க்கத்தான் தமிழகத்திற்கு வந்திருக்கிறேன். மோடி இமேஜ் உயர்ந்திருப்பதால், பத்து சீட்டுகளாவது ஜெயித்துவிடுவோம்’ என்றார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமிழகத்தின் அரசியல் தட்பவெப்பம் புரியாத டெல்லி தலைவர்களெல்லாம், அவர் சொன்னதை நம்பவும் செய்தார்கள்.

ஆனால், நடைப்பயணம் என்கிற பெயரில் தன்னை புரமோட் செய்துகொண்டதைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை அண்ணாமலை. தமிழகத்தில் பூத் கமிட்டி தொடர்பாக இரண்டு முறை கூட்டம் போட்டார் அமித் ஷா. ’ஒவ்வொரு பூத்துக்கும் 15 பேர் வீதம் ஆட்களைச் சேர்க்க வேண்டும்’ என டார்க்கெட்டும் அளித்தார்.

எதையும் நிறைவேற்றவில்லை அண்ணாமலை. தாமரைச் சின்னம் போட்டியிட்ட 23 தொகுதிகளில், 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. அண்ணாமலை சொன்ன கணக்குப்படி வாக்குகளும் கிடைக்கவில்லை, சீட்டுகளும் வரவில்லை. அதேநேரத்தில், அரசு ஊழியர்கள், காவலர்கள், வயது முதிர்ந்தோர் வாக்களிக்கும் தபால் வாக்குகளில், தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது பா.ஜ.கதான்.

கட்சி பெற்றிருக்கும் 11.24 சதவிகித வாக்குகளில், கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அடங்கியிருக்கின்றன. பா.ஜ.க போட்டியிட்ட இடங்களில், திருவள்ளூர், மத்திய சென்னை, தென்சென்னை, வேலூர், கோவை, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று, இரண்டாமிடத்தைப் பெற்றிருக்கிறது கட்சி. அதில், வேலூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் கூட்டணி பலத்தால் மட்டுமே கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அதைத் தக்க வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் கட்சியில் வலுப்பெறவில்லை. அதையெல்லாம் சரிசெய்யாமல், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், கட்சி காணாமல் போய்விடும்” என்றனர்.

2026-க்குள் பா.ஜ.க காணாமல் போகிறதோ இல்லையோ, ஓ.பன்னீர்செல்வத்தின் அணி காணாமல்போய்விடும் போல. பலாப்பழச் சின்னத்தில் போட்டியிட்டு, இராமநாதபுரத்தில் இரட்டை இலையைப் பின்னுக்குத் தள்ளியிருந்தாலும், நொந்துதான் போயிருக்கிறார் பன்னீர். ‘ஜெயித்தால் மந்திரி’ எனக் கனவில் இருந்தவரை, ‘தூங்கியது போதும் எந்திரி...’ என எழுப்பிவிட்டது தேர்தல் ஆணையம்.

அவரே ஒரு சிறு குழுவாகத்தான், அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி ‘அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு’ என்கிற பெயரில் பெட்டிக்கடை போட்டார். அவர் தோல்வியைத் தொடர்ந்து, அந்தக் கடையிலும் உடைப்பு ஏற்பட்டு, ஜெ.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஏற்பாட்டில், ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழு’ என்கிற புதிய தள்ளுவண்டிக் கடை உருவாகியிருக்கிறது.

டெல்லியிலாவது அனுசரணை வார்த்தைகள் கிடைக்கும் என ஆறுதல் தேடிச் சென்ற பன்னீரிடம், பூங்கொத்து வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டார் மோடி. பா.ஜ.க கூட்டணியில், பத்துத் தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க-வுக்கும் இந்தத் தேர்தல் சறுக்கல் தான். கட்சியின் வாக்குவங்கி வெகுவாகச் சரிந்திருக்கிறது.

2019 தேர்தலின் போது, ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 5.5% வாக்குகள் பெற்ற கட்சி, தற்போது பத்துத் தொகுதிகளில் போட்டியிட்டு 4.3% வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை விரும்பிய பெரியவர் ராமதாஸ், தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு ரொம்பவே கொதித்துப் போயிருப்பதாகச் சொல்கின்றன தைலாபுரம் வட்டாரங்கள். “அப்பவே பா.ஜ.க கூட்டணி வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா..? இப்ப, நம்மளோட வாக்கு சதவிகிதமே குறைஞ்சு போய்டுச்சு. 2026 தேர்தலில் யாராச்சும் நம்மளை மதிப்பாங்களா...” என அன்புமணியிடம் பெரியவர் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள் பா.ம.க சீனியர்கள்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அந்தஸ்தைப் பெறுவதற்கு, சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில், சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலில் 8.19% வாக்குகளைப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்துக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மகிழ்ச்சி அடைவதற்கும் சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும் ஒவ்வொரு கட்சிக்கும் காரணத்தை அளித்திருக்கின்றன. மத்தியில் மீண்டும் அரியணை ஏறியிருக்கும் மோடி அரசு, முன்புபோல இஷ்டத்திற்கு சட்டங்களை இயற்ற முடியாதபடி, அவர்களின் மைனாரிட்டி எண்ணிக்கை கடிவாளம் போட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் விழுந்திருப்பதும், ஆறு சதவிகித வாக்குகள் சரிந்திருப்பதும், தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய இடத்திற்குத் தள்ளியிருக்கிறது.

கட்சிக்குள் முளைத்திருக்கும் காளான்களைக் களையெடுக்காவிட்டால், எடப்பாடியின் அதிகாரம் அ.தி.மு.க-விற்குள் மொத்தமாகவே பறிபோய்விடும். அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், எந்த திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனத் தெரியாமல் பன்னீரும் தினகரனும் இப்போதே தடுமாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

வாக்கு சதவிகிதத்தைத் தக்கவைக்கவும், உயர்த்திக்கொள்ளவும் பா.ஜ.க தன் ஆட்டத்தை ஆடத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக திராவிடக் கட்சிகளும் வரிந்துகட்டக்கூடும். ஆளுநர்-ஆளுங்கட்சி மோதல் இனி அடுத்த கட்டத்திற்குத் தாவலாம். தமிழக அரசியலில் இனிதான் ஆக்‌ஷன் பிளாக் களைகட்டப் போகிறது!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!