`நாங்க முன்னாலே போறோம்..நீங்க பின்னாலே வாங்க' அதிமுகவில் ஒலிக்கும் புது பாட்டு..!
அதிமுகவில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுடைநம்பி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்த அறிவுடைநம்பி, வைத்திலிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அவரது தீவிர ஆதவாளராக மாறினார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ”ரதிமீனா” சேகர். இவர் மனைவி ரத்னா சேகர் கும்பகோணம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர். ரதிமீனா சேகரும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக வலம் வந்தவர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம் தலைமையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் ஆகியோர் இருந்தனர்.
கடந்த சில மாதங்களாகவே வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளால் இருவரும் அதிருப்தியில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோருடன் சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதற்கான ஏற்பாட்டை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் இருவரும் செய்திருந்தனர். தன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தது வைத்திலிங்கம் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர், ரத்னா சேகர், பொன்.த.மனோகரன், பசுபதிகோயில் முத்து உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் செல்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என வைத்திலிங்கம் மெனக்கெட்டார். அவர்களிடத்தில் `யாரும் இப்போதைக்கு போகாதீங்க, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... நல்ல சேதி வரும்' என்றுள்ளார்.
ஆனால் அவர்கள் வைத்திலிங்கம் பேச்சை கேட்கவில்லை. அப்போதும் விடாமல் பேசிய வைத்திலிங்கம், `ஏன் அவசர படுகிறீர்கள் எல்லோரும் ஒன்றாக போய் சேர்ந்தால், பலனடையலாம்' என்றும் சிலரிடத்தில் பேசியுள்ளார். அதற்கு, `நாங்க தி.மு.க போன்ற மாற்றுக்கட்சிக்கு செல்லவில்லை, தாய் கழகத்திற்குத்தான் செல்கிறோம், நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க'ணு சொன்னதாக பரவலாக பேசப்பட்டது.
என்ன சொல்லியும் வைத்திலிங்கத்தால் இணைப்பை தடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அறிவுடைநம்பியின் ஆதரவாளரான தாஸிடம், `நான் உன்னை பகுதி கழக செயலாளராக ஆக்குகிறேன், நீ போயிடாதே'னு வைத்திலிங்கம் பேசியதாக தகவல் பரவியது.
இதையறிந்த அறிவுடைநம்பி, `எத்தனை வருடங்கள் வைத்திலிங்கம் கூட நான் உண்மையாக இருந்தேன், ஆனால் எனக்கே துரோகம் செய்கிறாரே'னு வருத்தப்பட்டாராம். இந்நிலையில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் இணைய இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
பின்னர், இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்தனர். வைத்திலிங்கத்திடம் இருந்த மிக முக்கிய நிர்வாகிகளான அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, வைத்திலிங்கம் தரப்பை சோர்வடைய செய்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.
வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம், ``அறிவுடைநம்பி உள்ளிட்ட யாரையும் வைத்திலிங்கம் தடுக்கவில்லை. இரண்டு மாதங்களில் கட்சி சேரப்போகிறது அதற்குள் சென்று என்ன பலனடைய போகிறார்கள்... போகட்டும் என விட்டு விட்டார். வைத்திலிங்கத்தால் ஆளானவர்கள், அவரால் பயனடந்தவர்கள் விசுவாசம் இல்லாமல் செல்கின்றனர். இதனால் அவர்களுக்குத்தான் பின்னடைவே தவிர வைத்திலிங்கத்துக்கு ஒரு போதும் இல்லை" என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu