ப. சிதம்பரத்துக்கு சிக்கலை உண்டாக்கும் பாஜவினர்..!

ப. சிதம்பரத்துக்கு சிக்கலை உண்டாக்கும் பாஜவினர்..!
X

ப.சிதம்பரம் (கோப்பு படம்)

கார்த்தி சிதரம்பரத்திற்கு எதிராக டி.டி.வி., தினகரனை நிறுத்துவதன் மூலம் சிதம்பரத்திற்கு செக் வைக்க பா.ஜ.க., திட்டமிட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து போட்டியிட்டு வருவதால் நட்சத்திரத் தொகுதியாக கருதப்படுகிறது. ஆனால், அவர்கள் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளின் தயவாலேயே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

2014-ம் ஆண்டு தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என நான்கு அணிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. அப்போது சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். தனது மகனுக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்ததால் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலேயே முடங்கினார்.

பொருளாதாரப் புள்ளி விவரம் தெரிந்த அவர், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யாமல் சொந்த ஊரிலேயே முடங்கினார் என அப்போதே காங்கிரஸ் கட்சியில் கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வலுவாக இருந்ததால், கார்த்தி சிதம்பரம் எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்ற எண்ணத்தில் நாடு முழுவதும் பயணம் செய்தார். மேலும் பாஜக அரசுக்கு எதிராகப் பல புள்ளி விவரங்களைக் கூறி வந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் போன்றோர் எதிர்ப்பு இருந்தாலும் கார்த்திசிதம்பரத்துக்கே சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கார்த்திசிதம்பரம் நிறுத்தப்பட்டால், அவருக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பாஜக கூட்டணியில் வேட்பாளரை நிறுத்தினால், ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் முடங்கும் நிலை ஏற்படும். இதன் மூலம் அவர் நாடு முழுவதும் பிரச்சாரத்துக்குச் செல்வதைத் தடுக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த தேர்தலில் அமமுக சிவகங்கை தொகுதியில் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றதால், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டு வருகிறது. அமமுக சார்பில் டி.டி.வி.தினகரனை நிறுத்தினால் சிவகங்கை தொகுதியில் அதிகளவில் உள்ள அவரது சமுதாய மக்களின் வாக்குகள் பெருவாரியாக பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.

பழைய தொடர்பில் அதிமுகவினரிடம் இருந்தும் ஒத்துழைப்புக் கிடைக்கும். காங்கிரஸில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரானோரின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்தத் திட்டத்துக்கு டி.டி.வி.தினகரன் இசைந்தால் பாஜகவுக்கு சாதகமாகக் கருதப்படும் சிவகங்கை தொகுதியை அவருக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கார்த்திசிதம்பரத்துக்கு நெருக்கடி கொடுத்து, ப.சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!