நெல்லை தொகுதியை குறி வைக்கும் சரத்குமார்! விட்டுக் கொடுப்பாரா நயினார் நாகேந்திரன்?
நெல்லை நாடாளுமன்ற தொகுதி நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த நாடாளுமன்ற தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்கு சதவீதம் அதிகம் என்பதால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கூட்டணி பலத்தை அதிகரிக்க ஒவ்வொரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்களது கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
அந்த வகையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அவர் பா.ஜ.க கூட்டணியில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகள் கேட்டதாகவும், இது தவிர ஒரு மக்களவை உறுப்பினர் பதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியை சரத்குமார் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதாலும், ஏற்கனவே இங்கு கடந்த தேர்தல்களில் அவர் களம் கண்டுள்ளார் என்பதாலும் அவருக்கு நெல்லை தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மனதில் வைத்தே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் நெல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயாராகுமாறு முடுக்கி விட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிடும். ஆனாலும் அவர் நெல்லை தொகுதியை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார். மேலும் காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு தனது மனைவியான ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்று நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
ஏற்கனவே சரத்குமார் விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார். மேலும் அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்க எதிர்கால திட்டத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக பா.ஜ.க கூட்டணி சார்பில் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்டால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட வைப்பதோடு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சரத்குமார் கேட்டு பெற முனைப்புடன் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை தொகுதி தனக்கு தான் என்று முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க நெல்லை பாராளுமன்ற அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அவர் முன்னின்று நடத்தி தனக்கு தான் நெல்லை சீட் என்று மேலும் பிடிவாதத்தை அதிகப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர் விட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொந்த கட்சியினரே ஆதங்கப்படுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்ப வேட்பாளர்களை எழுதி கொடுத்தனர்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றாலும் அவர் எம்.பி. சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் சரத்குமாரா? அல்லது ராதிகா சரத்குமாரா என்பது தெரியவரும் என நிர்வாகிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu