மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின்னணி..!

மனோ தங்கராஜின் அமைச்சர்  பதவி பறிக்கப்பட்ட பின்னணி..!
X

மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் 

அமைச்சராக இருந்த மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக சில காரணங்கள் கட்சியினர் மத்தியில் சொல்லப்படுகின்றன. மனோ தங்கராஜ் கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக கனிமவள கொள்ளைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்.

இயற்கை பாதுகாவலராக தன்னை அடையாளப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். ஆனால், அமைச்சரான பிறகு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளங்கள் கடத்துவதை தடுக்கத் தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்தது. நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவள லாரிகள் மனோ தங்கராஜின் ஆசியோடு கேரளாவுக்கு செல்வதாக குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

அதே சமயம் தி.மு.க நிர்வாகிகளும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதில். "கட்சியில் பல சீனியர்கள் இருந்தும் மனோ தங்கராஜ் தனது மகன் ரெமோனுக்கு தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி பெற்றுக் கொடுத்தார். கிழக்கு மாவட்டச் செயலாளரான மேயர் மகேஸுக்கு எதிராக சக கவுன்சிலர்களை தூண்டிவிட்டு கலகத்தை ஏற்படுத்தி வந்தார்.

மனோ தங்கராஜின் மகன் ரெமோன் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நாகர்கோவிலில் இருந்துகொண்டு மேயர் மகேஸுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்த வைட்டமின் சம்பந்தப்பட்ட பிரச்னையில் கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஸுக்கும், மனோதங்கராஜிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்தே கிழக்கு மாவட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என மனோ தங்கராஜிடம் தி.மு.க தலைமை சொல்லியிருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு குமரி கிழக்கு மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளுக்கு மேயர் மகேஸுக்கு தகவல் கொடுக்காமல் நடத்தி உள்ளார் மனோ தங்கராஜ். இதுவும் ஆதாரங்களுடன் புகாராக தலைமைக்குச் சென்றுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மனோ தங்கராஜின் மகனின் ஆதரவுடன் ரெளடிப் பட்டியலில் உள்ள சிலர் போலீஸாரின் கண்முன்பாகவே கெத்தாக வலம் வந்துள்ளனராம். இதுகுறித்த ரிப்போர்ட்டும் போலீஸ் உளவுத்துறை மூலம் தலைமைக்குச் சென்றுள்ளது. அமைச்சர் என்ற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சொந்த கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளருடன் மோதலில் ஈடுபட்டது, மகனின் அட்ராசிட்டி போன்ற குற்றச்சாட்டுகள் குவிந்ததை அடுத்தே மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!