மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் போட்டி
முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (கோப்பு படம்)
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என்று உ.பி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறினார்.
இது குறித்து அஜய் ராய் கூறியவாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார். 2024 தேர்தலில் பிரியங்கா காந்தி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார். பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட விரும்பினால், ஒவ்வொரு தொண்டரும் அவரை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு நேரடிப் போட்டியாக ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவித்துள்ளதால், இந்த முடிவு குறிப்பிடத்தக்க தேர்தல் போருக்கு களம் அமைக்கிறது.
அமேதி மக்களவைத் தொகுதி ஒரு காலத்தில் காந்தி குடும்பத்தின் தொகுதியாக இருந்தது, 2004 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட்டார், அப்போது அவரது தாயார் சோனியா காந்தி அவருக்காக அந்த இடத்தைக் காலி செய்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்து வயநாடு எம்.பி.யானார்.
இதற்கு முன்பு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, உ.பி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அஜய் ராயை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமித்தார்.
"உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அஜய் ராயை காங்கிரஸ் தலைவர் உடனடியாக நியமித்துள்ளார்" என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் ராய் 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தலில் வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு பிரதமர் மோடியிடம் தோல்வியடைந்தார்.
மேலும், தொழிலதிபர் ராபர்ட் வதேரா தனது மனைவியும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தியை 2024 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது: பிரியங்கா முதலில் மக்களவைக்கு வர வேண்டும், அவர் மக்களவைக்கு வந்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அமேதி அல்லது சுல்தான்பூர் எதுவாக இருந்தாலும், கட்சிக்கு ஏற்றதாகத் தோன்றுகிற இடங்களில், அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu