தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!

தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
X
பிரசாரத்தின் போது கூட்டம் இல்லாததைக் கண்டு டென்ஷனான நடிகை ராதிகா பரப்புரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

பரப்புரையின்போது கூட்டம் இல்லாததால் கோபமான ராதிகா சரத்குமார் பரப்புரையை பாதியிலேயே விட்டுவிட்டு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமார் தான் தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சமீபத்தில் இணைத்தார். மனைவி ராதிகாவைக் கேட்டு கட்சியை பா.ஜ.க.,வுடன் இணைத்தவர், தன் மனைவியையே விருதுநகர் தொகுதியில் வேட்பாளராகவும் களமிறக்கி அழகு பார்த்துள்ளார். "’சூர்யவம்சம்’ சின்ராசு மாதிரி இந்த நாட்டாமை எனக்கு பக்கபலமாக இருக்கிறார்" என கணவர் சரத்குமார் குறித்து ராதிகா பிரசாரத்தில் பெருமையாகப் பேசினார்.

அவரும் ‘சூர்யவம்சத்தில் தேவயாணியை கலெக்டராக்கியது போல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன்’ என்றார். மேலும், தனக்கு எதிராக விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை தனது மகன் போல எனச் சொல்லியும் நெகிழ்ந்தார்.

இப்படி ராதிகா அரசியல் களத்தில் இறங்கியது முதலே அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், களநிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. ராதிகாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியதில் கட்சியில் இருக்கும் பலருக்கும் அதிருப்தி என சொல்லப்படுகிறது.

இதன் எதிரொலியாகவே, விருதுநகரில் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால், ’கூட்டணியில் ஒற்றுமையில்லை, பாஜகவில் உட்கட்சி பூசல் தொடங்கி விட்டது’ என விவாதம் எழுந்தது.

இதை உறுதி செய்யும் விதமாக, ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகளும் யாரும் அவரது பரப்புரைக்கு வரவில்லை மற்றும் அங்கு போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பரப்புரையை ரத்து செய்து கடுகடுத்த முகத்தோடு சென்னை திரும்பியிருக்கிறார் ராதிகா. இந்த சம்பவம் விருதுநகர் தொகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா