முடிவானது திமுக- பாஜக இடப்பங்கீடு: யாருக்கு எவ்வளவு சீட்?

முடிவானது திமுக- பாஜக இடப்பங்கீடு: யாருக்கு எவ்வளவு சீட்?
X
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மொத்தம், ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதில், 75 கி.மீ தொலை தூரமுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை - தேனி இடையிலான ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். மேலும், சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டம் ரூ.1800 கோடி செலவில் முடிக்கப்படும்.

இதுதவிர ரூ.910 கோடி மதிப்பிலான மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்- பெங்களூரு பிரிவு இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் உள்ளிட்டவற்றை பிரதமர் அர்ப்பணித்து வைக்கிறார்.


முன்னதாக, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை, ஆளுனர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் மாற்று ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கில், மொத்த இருக்கைகளை பங்கிட்டு கொள்வது தொடர்பாக, பாஜக - திமுக இடையே பேச்சு நடத்தி, அதன்படி, பாஜகவினருக்கு 1500 இருக்கைகளுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது. திமுகவினருக்கு 2500 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை, பிற கட்சியினர், அமைப்பினர், பொதுமக்களுக்கு என்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!