பா.ஜ.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி - கோப்புப்படம்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்காகவே கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடி 4 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கடந்த கால தேர்தல்களில் இருந்த வரவேற்பைவிட இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியும் மிகுந்த வரவேற்பும் பிரதமர் மோடியையும் அகில இந்திய தலைவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அதே நேரத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் மக்கள் ஆதரவை பெற்றுவிட முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த அரசியல் சூட்டை தணியாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் முதற்கட்ட சுற்றுப் பயணம் வருகிற 13ம் தேதி குஜராத்தில் முடிவடைகிறது.
அடுத்த ஓரிரு தினங்களில் தேர்தல் அறிவிப்பு செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது.
இந்த மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வர இருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் கோவைக்கு அவர் வருவார் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் முக்கியமானவை.
இதை மையமாக வைத்து பிரதமர் மோடி கோவையில் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த மேடையில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளார்.
இதற்கிடையில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலூர், பாரிவேந்தர் போட்டியிடும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியை பிரசாரத்துக்கு அழைத்துள்ளனர்.
எனவே முதல் கட்ட பிரசாரத்தில் கோவையை மட்டும் நிறைவு செய்கிறார். அதன் பிறகு மீண்டும் சில நாட்களில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு மோடி வருவார். அப்போது தமிழகத்தில் உள்ள வேலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத் திட்டம் அமையும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu