ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வு: திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஓ. பன்னீர்செல்வம்
இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பாதிப்பால் துவண்டு போன பொருளாதாரம் மீண்டு வரும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது என்று, தேர்தலில் திமுக தெரிவித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்யும் சட்ட முன்வடிவை திமுக அரசு நிறைவேற்றியிருப்பது `வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்` உள்ளது.
சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்ட முன்வடிவிற்கு அறிமுக நிலையிலும், பரிசீலனை நிலையிலும் அதிமுக எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அதனைப் புறந்தள்ளிவிட்டு, சட்ட முன்வடிவு இயற்றப்பட்டதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு செய்வதன் மூலம், சொத்து வரி உயர்வு பற்றி மக்கள் கேள்வி கேட்டால் உள்ளாட்சி அமைப்புகள் மீது பழியை போட்டு விடலாம் என்று திமு.க அரசு நினைக்கிறது. இதுதான் திராவிட மாடலோ என்னவோ!
ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்வு அறிவிப்பின் மூலம் நகர்ப்புறங்களில் மேலும் வாடகை உயரும் சூழல் உருவாகும். இது மட்டுமல்லாமல், வணிக நோக்கத்தோடு கடைகள் மற்றும் நிறுவனங்களை வைத்திருப்பவர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தக்கூடும்.
'மக்கள் நலன்' என்று அடிக்கடி பேசும் தமிழக முதல்வர் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவை திரும்பப் பெற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu