ஓ.பி.எஸ்.,க்கு என்ன ஆச்சு..? பதட்டத்தில் வெளியான அறிக்கை..!

ஓ.பி.எஸ்.,க்கு என்ன ஆச்சு..?  பதட்டத்தில் வெளியான அறிக்கை..!
X

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் (கோப்பு படம்)

கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தது.

வரும் மக்களவை தேர்தலில் களமிறங்க பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றது ஓபிஎஸ் அணி. இன்னும் தொகுதி பங்கீடு உறுதியாகாத நிலையில், இரண்டு நாட்களாக தேர்தலில் இருந்து ஓபிஎஸ் அணி பின்வாங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என பாஜக தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட நிலையில்,அதற்கும் அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற காரணத்தினாலும் தான் ஓபிஎஸ் பின்வாங்கினார் என்பதும் தலைப்பு செய்தியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரசாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் "இரட்டை இலை" சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து "இரட்டை சிலை" சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம்.

இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil