பழனிசாமியுடன் இணைந்தது தான், நான் செய்த பாவம்: ஓபிஎஸ் கண்ணீர்..!
கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்
தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது.
இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
அதிமுகவை எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு தொடங்கிய போது ஒரே ஒரு விதியை மட்டும் காலத்துக்கும் மாற்ற முடியாத வகையில் உருவாக்கினார். அது என்னவென்றால் தொண்டர்கள் மூலமாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.
ஆனால், கே.பழனிசாமி சர்வாதிகாரி போல் அந்த விதியை காலில் போட்டு மிதித்து விட்டார். மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி இந்த திருத்தத்தை அவர் செய்துள்ளார். ஆனால், அவரால் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்காக, அவரை அதிமுகவில் இருந்து மட்டுமில்லாது, அரசியலில் இருந்தே விரட்டுவேன். ஜெயலலிதா என்னை 2 முறை முதல்வராக நியமித்தார்.
நானும், எப்படி அந்த பொறுப்பை கொடுத்தாரோ அப்படி அவரது காலில் விழுந்து ஆசி பெற்று மீண்டும் ஒப்படைத்து விட்டேன். அதுபோல், சசிகலா கே.பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தார். ஆனால், இவர் திருப்பி கொடுத்தாரா? அது கூட பரவாயில்லை. அரசியல் நாகரீகம் இல்லாமல் சசிகலாவை விமர்சிக்கிறார்.
அவரை கட்சியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்கிறார். கே.பழனிசாமி பல தியாகங்களை செய்ததாக கூறுகிறார். முதல்வர் ஆவதற்கு முன்பு, இவரை யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கே.பழனிசாமியுடன் இணைந்தேன்.
அவரை கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தான் நான் செய்த பாவம். இவரது தலைமையில் 8 முறை அதிமுக தேர்தலை சந்தித்து, ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. தற்போது மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் குழுவை அமைத்துள்ளார். ஆனால், ஒரு கட்சி கூட அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
ஜெயலலிதா இருந்த போது தேசிய தலைவர்கள் அவரது வீட்டில் கூட்டணிக்காக தவம் கிடந்தனர். ஆனால், அப்படியிருந்த கட்சியின் கம்பீரத்தை கே.பழனிசாமி கபளீகரம் செய்து மதிப்பில்லாத கட்சியாக்கி வருகிறார். கே.பழனிசாமியின் தவறான வழிகாட்டுதல், குளறுபடிகளால் அதிமுகவை பல பிரிவுகளாக பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை அழிக்கப் பார்க்கிறார்.
தோல்விகளுக்கு பொறுப்பேற்று கே.பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் உங்களை தூக்கி எறிவர். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu