தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
X

கமல் ஹாசன் 

கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவியை மட்டும் அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாகி வருகிறது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டு தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கமல்ஹாசன் போட்டியிடுவதற்கு வசதியாக கோவை நாடாளுமன்ற தொகுதியைவிட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திட்டமிட்டு உள்ளது. அதற்கு பதிலாக தி.மு.க. கடந்தமுறை வெற்றி பெற்ற பொள்ளாச்சி தொகுதியில் களம் இறங்க அந்த கட்சி காத்திருக்கிறது.

இதை தொடர்ந்து இன்னொரு தொகுதியாக தென் சென்னை அல்லது மதுரை தொகுதியை கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகுந்த கவனத்தோடு காய் நகர்த்தி வருகிறது.

இதில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் கோவை தொகுதியில் மட்டுமே களம் இறங்க முடியும் என்கிற இக்கட்டான சூழல் கமல் கட்சிக்கு ஏற்படும். அது போன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பற்றியும் கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளிலேயே கமல் ஹாசனுக்கு இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி யும் ஒத்துக் கொண்டு உள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 10 இடங்களை ஒதுக்க தி.மு.க. தலைமை தயாராக உள்ளது.

இந்த 10 தொகுதியில் கமல்ஹாசனுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால் மீதம் 8 தொகுதிகள் மட்டுமே இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி அதுபற்றி யோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.

இதனால் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மட்டும் அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை பதவியை எப்படியாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!